மட்டக்களப்பு பல்கலைகழகத்தை கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றியிருப்பதானது சிறுபான்மை சமூகத்தை பழிவாங்கும் நோக்கில் செய்யப்படுகின்ற நடவடிக்கையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பல்கலைகழகத்தை கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றியிருப்பது குறித்து திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு கெம்பசை கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றியிருப்பதானது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
இந்த மட்டக்களப்பு பல்கலைக் கழக கல்லூரியை அரசாங்கம் கையகப்படுத்தினால் அதில் பல்கலைக்கழக கல்லூரி ஒன்றை ஆரம்பித்திருந்தால் எந்த மறுப்பும் யாரும் சொல்வதற்கில்லை.
ஆனால் அந்த பல்கலைக்கழகத்தை கையகப்படுத்துகின்றோம் என்ற அடிப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக ஏற்படுத்தும் நடவடிக்கையானது மிகவும் கவலைக்குரியதும் கண்டனத்துக்குரியதுமான விடயமாகும்.
இந்த நாட்டில் போதுமான இடவசதிகளைக் கொண்ட பல இடங்கள் இருந்த போதிலும் கூட கிழக்கை குறிப்பாக மட்டக்களப்பை பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த கையகப்படுத்தல் நடவடிக்கை மேற் கொள்ளப்படுகின்றதா என்ற ஒரு சந்தேகம் இந்த மாவட்டத்தில் வாழுகின்ற மக்களுக்கும் இந்தப்பிரதேசத்தில் வாழுகின்ற மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரோடு பேசிய போது இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்று அவர் கூறுகின்ற போதிலும் கூட இந்தப் பிராந்தியத்தில் வசிக்கின்ற மக்களின் மனோ நிலைக்கு முற்றிலும் பாதகமான செயற்பாடாக இந்த நடவடிக்கை உள்ளது.
இந்த பல்கலைக்கழக கல்லூரியை ஒரு கல்விக் கல்லூரியாக மாற்றுவதென்பது அல்லது அனைத்து சமூகமும் பயன் பெறக் கூடிய கல்லூரியாக மாற்றுவதென்பதற்கு எனக்கும் இந்தப்பிராந்தியத்திலுள்ள மக்களுக்கு எந்தவிதமான கருத்து முறண்பாடுகளும் இல்லை என்பதை நான் கூறி வைக்க விரும்புகின்றேன்.
சிறுபான்மை சமூகத்தை பழிவாங்கும் நோக்கில் செய்யப்படுகின்றதா என்ற சந்தேகமிருக்கின்றது. இக்கால கட்டத்திலே இந்த அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தை பழிவாங்கும் செயற்பாடுகளை செய்யக் கூடாது என்பதே வேண்டுகோளாகும்
இது ஒரு தனிநபரின் பிரச்சினையல்ல. இந்தப்பிராந்தியத்தில் வாழுகின்ற அனைத்து சமூகங்களின் பிரச்சினையாக இந்த விடயம் காணப்படுகின்றது.
எனவே இதனை தடுப்பதற்காக இந்தப்பிராந்தியத்திலுள்ள அனைத்து சமூகதத்தின் தலைவர்களும் சிவில் சமூக அமைப்புக்களும் செயற்பட வேண்டும் என்றார்.