கொரோனா வைரஸ்’ பாதிப்பால் 68 வயது மூதாட்டி நேற்றிரவு பலியானார். இந்தியாவில் கொரோனவால் பலியான இரண்டாவது நபர் இவர் ஆவார்.
முதன் முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது 116-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியதையடுத்து, கேரளம், கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 81 பேருக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
சவுதியிலிருந்து சமீபத்தில் கர்நாடகா மாநிலம் கல்புர்க்கி பகுதிக்கு திரும்பிய முகமது உசைன் சித்திக் என்ற 76 வயது முதியவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மார்ச் 10ம் தேதி அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், டில்லியைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி மூதாட்டி நேற்றிரவு உயிரிழந்தார். மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதை மத்திய சுகாதாரத் துறையும், டெல்லி அரசும் உறுதி செய்துள்ளது. இதன் மூலம், கொரோனா பாதிப்பால், இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, இரண்டாக உயர்ந்துள்ளது.
இதனிடையே, மூதாட்டியின் மகனுக்கும், கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.