கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 5436ஆக உயர்வடைந்துள்ளது.
உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 45ஆயிரத்து 857ஆக அதிகரித்துள்ளது.
மேலும், புதிதாக கொரோனா தொற்றுக்கு 67ஆயிரத்து 890 பேர் இலக்காகியுள்ளனர்.
அத்துடன், 6500 பேர் வரையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு ஆபத்தான கட்டத்தில் உள்ளனர்.
அத்துடன் இதுவரையில் 72 ஆயிரத்து 531 பேர் குணமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், தற்போது ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவருகின்ற நிலையில் அங்கு 120 பேர் உயிரழந்துள்ளனர்.
ஈரானில் மேலும் 85 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 514ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் அண்டைய நாடான இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.
மேலும், இலங்கையில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ள அதே நேரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டு அங்கொடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சர்வதேச நாடுகளின் அரச தரப்பிலுள்ள பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கின்றது.
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி ட்ரூடோவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டிருக்கின்றார்.
அத்துடன் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார், எனினும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து திரும்பிய பிரேசில் அதிபரின் தகவல் தொடர்பு செயலாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இதுவரையில் இல்லாத நிலையில் தான் விரைவில் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனையை செய்து கொள்ளவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து தற்போது அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அண்மையில் பிரித்தானியாவின் சுகாதாரத் துறை அமைச்சருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு அமைச்சருக்கும் அங்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.