மக்களிடையே கொரோனா அச்சம் நிலவிவருகின்ற நிலையில் , நாட்டில் வணிக நடவடிக்கைகளுக்கு பாரிய பாரமாகக் காணப்படும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களினால் வழங்கப்பட்டுள்ள கடன்களை மீளப் பெற்றுக்கொள்ளல் 6 மாத காலத்திற்கு இடைநிறுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
அதேபோன்று வங்கியினால் வழங்கப்படும் பணி மூலதனம் 4 வட்டிக்கு பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மக்களின் அன்றாட வாழ்க்கையை இலகுபடுத்துவதற்காக அவர்களின் நுகர்வு நிலையை உறுதி செய்வதற்கு உத்தேசித்துள்ளதுடன், நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தடையாக அமையாதவாறு அரச சேவைகள், வங்க நிதி நடவடிக்கைகள், போக்குவரத்து செயற்பாடுகளை குறைந்தளவிலானோரைக் கொண்டு முன்னெடுப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
அந்தவகையில் நேற்று இரவு முதல் பருப்பு ஒரு கிலோவிற்கான அதிகபட்சம் 65 ரூபாவிற்கு விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, டின் மீன் ஒன்று நூறு ரூபாவிற்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் பல நிவாரணங்களை எதிர்காலத்தில் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பில் இடம்பெற்று வரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள், செயற்பாடுகள் குறித்து நேற்று நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையின்போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.