கொரோனா வைரஸ் பரவுவதால் உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனங்களில் ஒன்றான எமிரேட்ஸ் பிரான்ஸ், ஜேர்மனி, நைஜீரியா, நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி ஆகிய அனைத்து பகுதிகளுக்கும் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் அறிவிப்பு வரும் வரை பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் நைஜீரியா விமானங்கள் மார்ச் 23 முதல் நிறுத்தப்படும் என்று ஒரு நிறுவனத்தின் மின்னஞ்சல் தெரிவித்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலகளவில் 186 நாடுகளுக்கு பரவியுள்ளது. சுமார் 3,000 பேர் பலியாகியுள்ளனர், 2,34,666 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது.
பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சர்வதேச விமான சேவையை முற்றிலுமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில், நியூயார்க் ஜே.எப்.கே மற்றும் நியூ ஜெர்சியின் நெவார்க் ஈ.டபிள்யூ.ஆர் ஆகியவற்றுக்கான விமானங்கள் மார்ச் 24 முதல் மேலதிக அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்படும் என்று மற்றொரு நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும், விமான நிறுவனம் தரப்பில் இத்தகவல் இன்று உறுதிப்படுத்தப்படவில்லை.
ஏற்கனவே 12க்கும் மேற்பட்ட வழித்தடங்களை நிறுத்தி வைத்துள்ள எமிரேட்ஸ், வைரஸ் தொற்றுநோயால் உலகளாவிய பயணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விமான சேவையை நிறுத்துவதாக கூறியுள்ளது.