கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு பல மானியங்களை அறிவித்துள்ளார்.
அந்தவகையில்,
வாகன வருமான சான்றிதழ் புதுப்பித்தல் கட்டணத்தை 15000 ரூபாவாக குறைத்தல், வரிப்பணம், மின்கட்டணம், நீர்க்கட்டணம், காசோலை செல்லுபடியாகும் திகதி மற்றும் கிரடிட் கார்ட் செலுத்தும் இறுதிக் காலமாக ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிவரை நீடித்தல்.
முச்சக்கர வண்டி சாரதிகளின் லீஸிங் கட்டணத்தை அறவீடு செய்யும் கால எல்லையை 06 மாதங்களுக்கு நீடித்தல்.
அரச ஊழியர்கள் மற்றும் தனியார்துறை அலுவலக அல்லா பணியாளர்களின் கடன் மீள் அறவிடல் காலம் மே 30ஆம் திகதிவரை நீடித்தல்.
வங்கி மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள 10 இலட்சம் ரூபாவுக்கு குறைந்த தனியார் கடன் மீள் செலுத்தும்காலம் 03 மாதங்களுக்கு நீடித்தல்.
தொழில்வாய்ப்புக்காக தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிகளுக்கான மார்ச் மாத அப்பியாசக் கொடுப்பனவான 20 ஆயிரம் ரூபா அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
கொரோனா வைரஸ் ஒழிப்பில் பங்கேற்கும் அனைத்து அரச ஊழியர்களுக்குமான காப்புறுதி நன்மைகள் இரட்டிப்பாக அதிகரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
அத்துடன் சுற்றுலா, ஆடைத்தொழிற்சாலை, பாரியளவான முதலீட்டு வர்த்தகங்களுக்காக 06 மாதகால கடன் நிவாரணம்.
உள்நாட்டு கொடுக்கல் வாங்கலுக்காக மாதாந்த கடன் அளவான 50000 ரூபா பெறுமதியான கிரடிட் கார்ட் கடன் வீதத்தை 15 வீதமாக உச்சவரம்பு மற்றும் மாதாந்த அறவீட்டை 50 வீதத்தில் குறைப்பு.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நேரத்தில் அனைத்து வங்கிகளையும் முழுநேரமும் திறத்தல்.
சமுர்த்தி பயனாளிகளுக்கு 10000 ரூபா வட்டி அற்ற அடிப்படைக் கொடுப்பனவு.
சதொச மற்றும் சமுர்த்தி விற்பனை நிலையங்களுக்கு வெற் மற்றும் ஏனைய வரிவிலக்கு.
துறைமுகம், சுங்கம், அத்தியாவசிய பொருட்கள், உணவு, உரம், மருந்து, எரிபொருள் என்பவற்றை சரியான நேரங்களில் விநியோகம் செய்தல்.
போன்ற நிவாரணங்களை ஜனாதிபதி இன்று அறிவித்துள்ளார்.
இந்த நிவாரணங்களை அளிப்பதற்காக அனைத்து அரச துறை அமைச்சுக்கள், கூட்டுத்தாபனங்கள், திணைக்களங்கள் மற்றும் அனைத்து பிரிவினருக்கும் ஜனாதிபதி செயலகம் அறிவித்தலை அனுப்பிவைத்திருக்கின்றது.