இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், அதை ஒழிப்பதற்காக, பலரும் தங்களால் இயன்ற உதவியை அரசுக்கு செய்து வரும் நிலையில், டிவிஎஸ் குரூப் 30 கோடி ரூபாய் நிதியாக நன்கொடை கொடுத்து உதவியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் மட்டும் தற்போது வரை 902 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், நாட்டின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான TVS மோட்டார் நிறுவனம் மற்றும் சுந்தரம்-கிலேடன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கொரோனாவை எதிர்த்துப் போராட உதவும், நாடு முழுவதும் பரவுவதைத் தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை எடுக்க 30 கோடி ரூபாய் தொகை நன்கொடையாகக் கொடுத்துள்ளது.
இதுகுறித்து டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு ஸ்ரீநிவாசன் கூறுகையில், இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து நாட்டை ஒன்று சேர்ந்து காக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். இதில் எங்களின் பங்காக 30 கோடி ரூபாய் நிதியை நன்கொடையாகக் கொடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவும் அதற்காக மத்திய மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைக்கு உதவுவதே எங்களின் முதல் குறிக்கோள். கடந்த 100 வருடமாக மக்களுக்கும், சமுகத்திற்கும் டிவிஎஸ் குழுமம் எப்படி உதவி செய்ததோ, அதைத் தொடர்ந்து செய்வோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்கு சமூகவலைத்தளங்களில் பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.