கொவிட் 19 தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கை மீறி செயற்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட அனேகமானோர், கொரோனா அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்தோர் என பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.
நாளாந்தம் பொலிஸ் ஊரடங்கை மீறுவோர் கைது செய்யப்பட்டுவரும் நிலையில், அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விஷேட பகுப்பாய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணாம் ஆகிய மாவட்டங்களிலேயே ஊரடங்கை மீறியோர் கைது செய்யப்பட்ட அதிக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இம்மாவட்டங்கள் கொரோனா அபாயம் அதிகமுள்ள பிரதேசங்கள் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
பொலிஸார் ஊரடங்கை மீறியோர் எனும் குற்றச்சாட்டில் 9 ஆயிரத்து 734 பொஏரை இன்று நண்பகல் வரை கைது செய்திருந்தனர். அத்துடன் அவ்வுத்தரவை மீறிய 2412 வாகனங்களும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.