ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது. பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டணத்தைச் சேர்ந்த ராஜா என்ற அசன் மைதீன்(வயது 33), அருள் பாண்டியன் (வயது 29), அன்வர் ராஜா (வயது 33) உள்ளிட்ட மூவரும் சேர்ந்து மது கிடைக்காத காரணத்தால் மாற்று போதை ஏற்றுக்கொள்ள கிளாசிக் என்ற ஷேவிங் செய்வதற்கு முன்பு பயன்படுத்தப்படும் லோஷனை குளிர்பானத்தில் கலந்து குடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மூவரும் ஆபத்தான நிலைக்கு சென்றதால் புதுக்கோட்டை மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ராஜா என்ற அசன் மைதீன், அருண் பாண்டியன் உள்ளிட்ட இருவரும் உயிரிழந்தனர். மேலும், அன்வர் ராஜா என்பவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கோட்டைப்பட்டினம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.