சந்தேக நபர்களை கைது செய்ய சென்றமையால், கொரோனா அச்சத்தில் ஒரு பொலிஸ் பொறுப்பதிகாரி, ஒரு குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட 38 பொலிஸார் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஜா- எல, பமுனுகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, கெக்கிராவ பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 38 பேரே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
இந்த சம்பவங்கள் குறித்து மேலும் அறிய முடிவதாவது,
பலாத்காரமாக தனியார் இடமொன்றுக்குள் அத்து மீறியமை தொடர்பில் பமுனுகம – தெலபுர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதன் காரணமாக பமுனுகம பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சுகவீனமடைந்ததன் காரணமாக றாகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்தே பமுனுகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 30 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இன்று திங்கட்கிழமை முழு பமுனுகம பொலிஸ் நிலையமும் தொற்று நீக்கல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்ப்ட்டுள்ளது.
பமுனுகம பொலிஸ் நிலையம் ஊடாக முன்னெடுக்ப்படும் சேவைகள் தற் சமயம் ஜா எல உள்ளிட்ட அருகே உள்ள பொலிஸ் நிலையங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.
இதனிடையே கெக்கிராவ பொலிஸார் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் சில காலமாக தேடி வந்த சந்தேக நபர் ஒருவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கெக்கிராவ இஹலகம பகுதியில் உள்ள தங்குமிடமொன்றில் ஒழிந்திருந்த நிலையில் அவரை கெக்கிராவ பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் கைது செய்தனர்.
இதன்போது அந்த சந்தேக நபர், அவரது சகோதரனுடனேயே அங்கு தங்கியிருந்துள்ளதுடன், கைதின் பின்னர் சகோதரனுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி தென்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரை அநுராதபுரம் வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்துள்ள நிலையில், அத்தங்குமிட உரிமையாளருக்கும் அதே அறிகுறி காட்டியுள்ளது. இதனையடுத்து அவரும் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ளார்.
இதையடுத்தே இந்த கைது நடவடிக்கையில் பங்கேற்ற குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 8 பேர் கெக்கிராவ பொலிஸ் நிலையத்திலேயே பிரத்தியேக கட்டிடமொன்றில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்ப்ட்டுள்ளனர்.