கொரோனா வைரஸ் தாக்கத்தால் இன்று இலங்கையில் ஏழாவது நபர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் கொழும்பு மவுண்ட் லவனியாவை சேர்ந்த உம்ரித் ஹாஜியார் (48).
களுத்துறை மாவட்டம் மக்கொனையை சேர்ந்த இவர், தற்போது கொழும்பில் வசித்து வந்தவர். இவர் பிரபலமான இரத்தினக்கல் வியாபாரியாவார்.
கொரொனா அச்சம் இலங்கையில் ஆரம்பித்த பின்னர், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் மவுண்ட் லவனியா நீதிமன்றத்தில் தம்பதியினர் மீது பொலிசார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த நபரே இன்று உயிரிழந்துள்ளார்.
அண்மையில் ஜேர்மனிக்கு சென்று வந்தார். இவரது நண்பரொருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது உறுதியானதையடுத்து, இவரை வீட்டுத் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருந்தார். எனினும், அதை அவர் பொருட்படுத்தவில்லை.
தனியார் வைத்தியசாலையில் பரிசோதனைக்கு சென்றிருந்தார்.
இந்த தகவல் தெரிய வந்ததும் சுகாதாரத்துறை அதிகாரிகளும், புலனாய்வு பிரிவினரும் இவரை அடையாளம் காண பகீரத பிரயத்தனம் செய்தனர். பெரு முயற்சியின் பின்னரே தம்பதியினர் அடையாளம் காணப்பட்டனர்.
கொரோனா தொற்றுடன் பொறுப்பற்று திரிந்த இவர்கள் மீது மவுண்ட் லவனியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக, பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.
மார்ச் 2வது வாரத்தில் அவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.



















