புதிய நாடாளுமன்றத்தை கூட்டுவதை விடுத்து கலைக்கப்பட்ட பழைய நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுவதற்கான அதிகாரம் அரசியலமைப்பில் இல்லை என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, மகா சங்கத்தினருக்கு எடுத்துரைத்துள்ளார்.
பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி நாட்டை குழப்பமான நிலைக்கு உள்ளாக்க வேண்டியதில்லை என்றும் பழைய நாடாளுமன்றத்தை கூட்டக்கூடாது என்பது மகாசங்கத்தினரின் ஏகமனதான தீர்மானம் என்றும் மகாசங்கத்தினர் சுட்டிக்காட்டினர்.
நாட்டில் கோரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் சட்டவாக்கங்களை முன்னெடுக்க நாடாளுமன்றத்தைக் கூட்டவேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி பௌத்த மகா சங்கத்தினருக்கு தெரிவித்துள்ளார்.
கோரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசு முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் தற்போதைய நிலமை குறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து மூன்று நிகாயக்களையும் சேர்ந்த மகாசங்கத்தினருக்கு விளக்கினார்.
இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தனது நிலைப்பாட்டைக் கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கோரோனா வைரஸை கட்டுப்படுத்தல், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், மக்களுக்கு வழங்கிய நிவாரணங்கள் மற்றும் எதிர்காலத்தில் சுதேச பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்தும் ஜனாதிபதி விளக்கினார்.
நாடு முகம்கொடுத்துள்ள சவால்களுக்கு மத்தியில் சுகாதார, பாதுகாப்பு துறைகளும் முழு அரச இயந்திரம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வழங்கிய ஒத்துழைப்பு பாராட்டத்தக்கதாக இருந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தனக்கு பெரும் மக்கள் ஆணையொன்றினை வழங்கி மக்கள் தன்மீது வைத்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் பலமானதெரு நாடாளுமன்றத்தின் தேவையை விளக்கிய ஜனாதிபதி, புதிய நாடாளுமன்றத்தை கூட்டுவதை விடுத்து பழைய நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான அதிகாரம் அரசியலமைப்பில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரத்தில் வெள்ளிக்கிழமை மகாசங்கத்தினரை சந்திப்பதற்கு தான் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்கு மூன்று நிகாயக்களினதும் மகாசங்கத்தினருக்கு அழைப்பு விடுத்தார்.
ஜனாதிபதி பதவியை ஏற்ற போது ருவன்வெலிசேயவிலும் ஜனாதிபதி கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட வேலையிலும் தான் குறிப்பிட்டதைப் போன்று மகாசங்கத்தினரின் ஆசிர்வாதம் மற்றும் வழிகாட்டல்களை மனமுவந்து எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அனைத்து மகாசங்கத்தினரினதும் முழுமையான ஆசிர்வாதம் ஜனாதிபதி தலைமையிலான அரசு முன்னெடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு உள்ளது என்று இதன்போது கருத்துத் தெரிவித்த மகாசங்கத்தினர் தெரிவித்தனர்.
பழைய நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி நாட்டை குழப்பமான நிலைக்கு உள்ளாக்க வேண்டியதில்லை என்றும் பழைய நாடாளுமன்றத்தை கூட்டக்கூடாது என்பது மகாசங்கத்தினரின் ஏகமனதான தீர்மானம் என்றும் மகாசங்கத்தினர் சுட்டிக்காட்டினர்.
முன்னர் இருந்த நாடாளுமன்றம் நாட்டின் தற்போதைய நிதிப் பிரச்சினைக்கு வகைகூறவேண்டும் என்று மல்வத்தை பீடத்தின் அநுநாயக தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜிதசிறி தேரர் குறிப்பிட்டார்.
வைரஸ் ஒழிப்புக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கும் ஜனாதிபதி முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை நோக்கும் போது புதியதொரு சிந்தனையொன்று நாட்டில் நடைமுறையாவது தெளிவாகிறது. அது ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்திற்கு ‘சுபீட்சத்தின் சிந்தனை’ என இணைக்கப்பட வேண்டிய உப பிரிவாகும் என அமரபுர ஸ்ரீ தர்மரக்சித நிகாயவின் மகாநாயக தேரர் சங்கைக்குரிய திருக்குணாமலயே ஆனந்த தேரர் குறிப்பிட்டார்.
கோரேனா வைரஸ் ஒழிப்பில் ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களில் உலகின் ஏனைய நாடுகளுக்கும் பாடம் கற்றுக்கொள்ள முடியும் என்று பேராசிரியர் சங்கைக்குரிய மெதகொட அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டார்.
நாட்டின் இளைய தலைமுறை மற்றும் பல்வேறு குழுக்கள் பல புத்தாக்கங்களை செய்துள்ளனர். அவை எதிர்காலத்திற்கு வழிகாட்டும் பொன்னான சந்தர்ப்பம் என்றும் ஜனாதிபதியின் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு மகா சங்கத்தினர் தொடர்ந்தும் பலமாக இருப்பார்கள் என்றும் தேரர் அவர்கள் குறிப்பிட்டார்.
பேராசிரியர் சங்கைக்குரிய இந்துராகாரே தம்மரத்ன தேரர் தாய்நாட்டை பாதுகாப்பதற்கு உதவும் 12 விடயங்களை உள்ளடக்கிய முன்வொழிவொன்றை முன்வைத்தார்.
இம்முறை வெசாக் பண்டிகையை இலத்திரனியல் ஊடகங்களை பயன்படுத்தி வீட்டிலிருந்தவாறு கொண்டாடுவதற்கு தேவையான பின்புலத்தை ஏற்படுத்துவதன் அவசியத்தை கலாநிதி சங்கைக்குரிய திவியகஹ யஸஸ்ஸி தேரரும் பேராசிரியர் தும்புல்லே சீலகந்த தேரரும் சுட்டிக்காட்டினர். அதற்காக குழுவொன்றை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
அனைத்து மக்களினதும் பசியை போக்குவதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகளை மகாசங்கத்தினர் பாராட்டுவதாக அஸ்கிரி பீடத்தின் அநுநாயக தேரர் சங்கைக்குரிய வெண்டருவே உபாலி தேரர் குறிப்பிட்டார்.
மூன்று நிகாயக்களினதும் மகாசங்கத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தி மகாநாயக்க தேரர்கள் மற்றும் அநுநாயக தேரர்கள் உள்ளிட்ட தேரர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்- என்றுள்ளது.