வடகொரிய தலைவர் இறந்து விட்டதாக பரவலாக தகவல் வெளிவரும் நிலையில், அவர் கோமா நிலையில் இருப்பதாக சில ஊடக நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வடகொரிய தலைவர் கிம் ஜாங் தொடர்பில் கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதன் உச்சகட்டமாக ஹொங்ஹொங் செய்தி ஊடக தலைவர் ஒருவர், கிம் ஜாங் இறந்துவிட்டதாகவே உறுதி செய்துள்ளார்.
குறித்த தகவல் சீனா முழுவதும் அங்குள்ள சமூக வலைத்தள பக்கங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஆனால் குறித்த தகவலை மறுத்துள்ள ஜப்பானிய பத்திரிகை ஒன்று, கிம் ஜாங் கோமா நிலையில், அல்லது மூளைச்சாவின் விளிம்பில் இருக்கலாம் என தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் அவருக்கு முன்னெடுக்கப்பட்ட இதய அறுவை சிகிச்சையானது தவறான முறையில் கையாளப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கிம் ஜாங் மூளைச்சாவு அடைந்ததாகவே இன்னொரு பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் பிரான்ஸ் மற்றும் சீனத்து மருத்துவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால் செய்தி ஊடகங்கள் இதுவரை வெளியிட்டுள்ள எந்த தகவலும் அதிகாரிகள் தரப்பிலோ, அரசு தரப்பிலோ உறுதி செய்யப்படவில்லை.
ஏப்ரல் 11 ஆம் திகதி ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்கியதிலிருந்து கிம் ஜாங் பகிரங்கமாக எந்த நிகழ்ச்சியிலும் தோன்றவில்லை,
மேலும், ஏப்ரல் 15 அன்று தேசிய தின கொண்டாட்டத்தில் அவர் இல்லாதது அவரது உடல்நிலை குறித்த ஊகங்களுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இருப்பினும், கிம் ஜாங் வுன் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதை தென் கொரியா மற்றும் சீனத்து அதிகாரிகள் உறுதிப்படுத்த மறுத்துள்ளனர்.
இதனிடையே, கிம் ஜாங் பயன்படுத்தும் அவரது சிறப்பு ரயில், வடகொரியாவில் உள்ள ரகசிய சுற்றுலா தலத்திற்கு கடந்த வாரம் சென்றதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
கிம் ஜாங் வுன் பொது நிகழ்ச்சிகளில் இருந்து தலைமறைவாவது இது முதல் முறையல்ல. கடந்த 2014 ஆம் ஆண்டு திடீரென்று காணாமல் போன கிம், சுமார் ஒரு மாத இடைவெளிக்கு பின்னர் ஊடகங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் தோன்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.