இந்தியாவில் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரின் அண்ணியை நிர்வாணமாக அடித்து உதைத்து சாலையில் அணிவகுப்பாக அழைத்து சென்ற கிராம மக்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தின் காகந்தா கிராமத்தை சேர்ந்தவர் உதய் (35). இவர் 15 நாட்களுக்கு முன்னர் மரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் உதய்யின் குடும்பத்தார் மற்றும் கிராம மக்கள் சிலர் உதய்யின் அண்ணியான 45 வயது பெண் தான் சூனியம் வைத்து அவரை கொலை செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார்கள்.
மேலும் அப்பெண் ஒரு சூனியக்காரி எனவும் கூறி அவர் வீட்டுக்கு சென்று அவரை உடைகளை கழட்டி நிர்வாணமாக்கி கடுமையாக தாக்கினார்கள்.
பின்னர் சாலையில் அவரை அணிவகுப்பாக இழுத்து வந்து ஒரு வீட்டின் அறையில் அடைத்து வைத்தார்கள்.
சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது தொடர்பாக பொலிசார் 10 பெண்களை கைது செய்துள்ளனர், மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொலிசார் கூறுகையில், மூடநம்பிக்கை மற்றும் கல்வி அறிவு இல்லாததால் தான் இது போன்ற மோசமான சம்பவங்கள் நடக்கிறது. இது தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளனர்.