தேசிய அனர்த்தமொன்றாக கருதப்படும் கொவிட் -19 தொற்றுநோய் பரவலில் மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க சகல எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அவர்கள் மக்கள் குறித்து சிந்திக்கவில்லை.
எனினும் எமது அழைப்பை ஏற்று தமிழ் மக்கள் சார்பில் கலந்துகொண்ட ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு விசேட நன்றிகளை தெரிவிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் அனர்த்த நிலைமை தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுவரும் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை அறிவுறுத்துவதற்காகவும், அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்காகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகை கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பிரதான எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ள வேண்டும் என அரசாங்கம் கூறிவந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சிகள் எவையும் கலந்துகொள்ளப்போவதில்லை என அவர்கள் அறிவித்திருந்தனர்.
மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பத்திலேயே இந்த அழைப்பை நிராகரித்த நிலையில் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் தேசிய மக்கள் சக்தி கட்சியும் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என்ற காரணத்தை கூறியிருந்தனர்.
ஐக்கிய தேசிய கட்சி பிரதமரின் அழைப்பை ஏற்பதாக கூறியிருந்த நிலையிலும் இறுதி நேரத்தில் அவர்களின் முடிவினை மாற்றிக்கொண்டனர்.
இந்நிலையில் இன்றுகாலை அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாத்திரமே எதிர்க்கட்சிகளின் சார்பில் கலந்துகொண்டதுடன் தற்போது மக்கள் எதிர்நோக்கும் பிரசினைகள் குறித்து பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பிடம் காரணிகளை கூறியிருந்தனர்.
தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் அவர்கள் தற்போது எதிர்நோக்கி வருகின்ற பொருளாதார மற்றும் சுகாதார பிரச்சினைகள், வாழ்வாதாரமின்றி மக்கள் படும் துன்பங்கள் என்பவற்றை அவர்கள் பிரதமரிடம் எடுத்துக்கூறியதுடன் தேசிய வேலைத்திட்டம் ஒன்றினை உருவாக்கி அதில் சகல மக்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் சகல காரணிகளையும் செவிமடுத்த பிரதமர் மற்றும் அரச தரப்பினர் தேசிய பிரச்சினை ஒன்றினை இப்போது நாடே எதிர்நோக்கியுள்ள நிலையில் தமிழர்களின் பிரச்சினைகளை முன்வைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வந்தமைக்காகவும்,
சகல எதிர்க்கட்சிகளும் கூட்டத்தை புறக்கணித்து அவர்களின் சுயநல அரசியலை முன்னெடுக்கும் வேளையிலும் மக்களின் நிலைமையை உணர்ந்து இந்த கூட்டத்தில் கலந்துகொண்டமைக்கான விசேட நன்றிகளை தெரிவிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தில் கலந்துகொண்ட கூட்டமைபின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையிலான சகல உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து தெரிவிக்கையில் கூறியதானது,
கடந்த ஐந்து ஆண்டுகளில் ரணில் விக்கிரமசிங்க அழைக்கும் போதெல்லாம் அலரிமாளிகையில் கூடிப் பேசிய மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் சஜித் தரப்பினர் நாட்டில் மிகமுக்கியமான பிரச்சினை குறித்து ஆராயும் வேளைகளில் அதனை புறக்கணிப்பதன் மூலமாக அவர்களின் அரசியல் கொள்கை என்ன என்பது தெளிவாக வெளிப்பட்டுவிட்டது.
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அவர்களுக்கான உதவிகளை வழங்க அரசாங்கம் சகல தரப்பின் ஒத்துழைப்பை எதிர்பார்த்து நிற்கும் இந்த வேளையிலும் இவர்கள் அனைவரும் மக்கள் குறித்து சிறிதும் கருத்தில் கொள்ளாது தமது பழிவாங்கும் அரசியலை முன்னெடுப்பது வேதனைக்குரிய விடயமாகவே நாம் கருதுகின்றோம்.
அதுமட்டும் அல்லாது இவர்கள் அலரிமாளிகை கலந்துரையாடலை புறக்கணித்துள்ளதன் மூலமாக இவர்களின் ஒரே நோக்கம் பாராளுமன்றத்தை கூட்டுவதும் அதன் மூலமாக நாட்டில் அரசியல் குழப்பம் ஒன்றினை ஏற்படுத்துவது என்பதும் தெளிவாக வெளிப்பட்டுவிட்டது.
மக்கள் பிரச்சினையை பேசி அனைவரும் இணைந்து தீர்மானம் ஒன்றினை எடுப்போம் என்பதுவும், நிதி ஒதுக்கீடுகள் தேவைப்படும் என்றால் அதனை பேசி ஒதுக்கீடுகளை செய்துகொள்ள முடியும் என்பதனை கருத்தில் கொண்டே அனைவருக்கும் அழைப்பு விடுத்தோம்.
ஆனால் எதிர்க்கட்சியினர் அதற்கு இணக்கம் தெரிவிக்காது, பாராளுமன்றத்தை கூட்டுங்கள் என்ற காரணியை மட்டுமே கூறி வருகின்றனர். என்றால் உண்மையில் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க இவர்கள் நினைக்கவில்லை என்பதே உண்மையென வெளிப்பட்டுவிட்டது.
எனினும் தமிழ் தேசிய கூட்டமைபின் சகல உறுப்பினர்களும் நிலைமையை உணர்ந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அலரிமாளிகை கலந்துரையாடலில் கலந்துகொண்டமைக்கான விசேட நன்றிகளை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.