ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான நடந்த சண்டையில் மேஜர் அனுஜ் சூட்உயிரிழந்த நிலையில், சவப்பெட்டியில் இருந்த அவரின் முகத்தை மனைவி அக்கிரிட்டி சூட் ஒரு வித ஏக்கத்துடன் பார்க்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசம், குப்வாரா மாவட்டம், சாங்கிமுல்லா கிராமத்தில், ஒரு வீட்டில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பொதுமக்கள் சிலரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.
இதனால், அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். மேஜர் அனுஜ் சூட் தலைமையிலான இராணுவத்தினரும் விரைந்தனர்.
பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டுக்குள் இராணுவத்தினரும், பொலிசாரும் நுழைந்ததால், அவர்களை நோக்கி பயங்கரவாதிகள், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
உடனடியாக இராணுவத்தினரும், பொலிசாரும் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிணைக் கைதிகளாக பயங்கரவாதிகள் பிடித்து வைத்திருந்த அனைவரும், உயிருடன், பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், மேஜர் அனுஜ் சூட் உட்பட நான்கு இராணுவத்தின வீரர்களும், பொலிஸ் சப் – இன்ஸ்பெக்டர் ஒருவரும் வீர மரணம் அடைந்தனர்.
இந்நிலையில் மேஜர் அனுஜ் சூட்டின் உடல் கொண்டு சொந்த ஊருக்கு வரப்பட்டு, முழு இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்வதற்காக சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.
அப்போது அவரின் மனைவி அக்கிரிட்டி சூட், சவப்பெட்டியில் கைகளை வைத்த படி, ஒரு வித ஏக்கத்துடன் இறந்த தன் கணவரின் முகத்தை பார்க்கிறார்.
https://twitter.com/anita_chauhan80/status/1257554157344485377
இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக, இணையவாசிகள் பலரும், இதை கூறுவதற்கு வார்த்தையே இல்லை என்று குறிப்பிட்டு வருகின்றனர்.