கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று இலங்கையில் 9 ஆவது மரணம் பதிவான நிலையில், மரணித்த பெண்ணுக்கு மேலதிகமாக அன்றைய தினம் மேலும் மூன்று தொற்றாளர்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார சேவைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அம் மூவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது.
அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளின் போது அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உருதியானதாகவும், அதனால் அவர்கள் மூவரின் பெயர்களையும் தொற்றாளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்ததாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
வெலிக்கடை பொலிஸ் பிரிவின், ராஜ்கிரிய – பண்டாரநாயக்க புர, கொலன்னாவை – சாலமுல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறையொன்றின் தாதி ஆகியோரின் பெயர்களே இவ்வாறு கொரோனா தொற்றாளர் பட்டியலில் நேற்று சேர்க்கப்பட்ட நிலையில் இன்று நீக்கப்பட்டுள்ளது.
ராஜகிரிய – பண்டாரநாயக்க புர பகுதியில் எற்கனவே கொரோனா அபாயம் இருப்பதாக கருதி 50 வீடுகளில் வசிப்போர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவ்வாறு சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த வீடொன்றில் வசிக்கும் 50 வயதான ஒருவருக்கே தொற்று இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மூச்சுத் திணறல் தொடர்பில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் போதே கொரோனா தொற்றிருப்பது உறுதியானதாக கூறப்பட்டது.
குறித்த நபர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் எனவும், அவரது நெருங்கிய தொடர்பாடல் வட்டத்தின் கீழ் உள்ள 5 குடும்பங்களைச் சேர்ந்த 29 பேர் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்பினர் கூறினர். இதனையடுத்து ராஜகிரிய – பண்டாரநாயக்க புர பகுதி தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் குறித்த நபர், அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
அதே போல், கொலன்னாவை – சாலமுல்ல பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவர் கால் உபாதை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சைப் பெற சென்றுள்ள நிலையில், அங்கு அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் போது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் அவரின் நெருங்கிய தொடர்பாடல் வட்டத்துக்குள் வரும் 27 பேர் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கான மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் நேற்று அடையாளம் காணப்பட்டதாக கூறப்பட்ட மற்றைய தொற்றாளர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின், கட்டணம் செலுத்தும் சிகிச்சை அறையொன்றில் சேவையாற்றும் தாதி என சுகாதாரத்துறையினர் கூறியிருந்தனர்.
இந்த மூவருக்கும் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில், கொரோன தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பனிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க குறிப்பிட்டார்.
இதனையடுத்தே அவர்கள் மூவரும் தொற்றாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதன்படி இன்று வரை கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 150 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கொழும்பு 15, முகத்துவாரம் பொலிஸ் பிரிவின் மெத்சந்த செவன தொடர் மாடி குடியிருப்பைச் சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிரிழந்ததை அடுத்து அந்த தொடர்மாடியில் வசிக்கும் 1000 பேர் வரை சுய தனிமைபப்டுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் அவர்களில் குறித்த பெண்ணின் முதல் சுற்று, 2 ஆம் சுற்று தொடர்பாடல் வட்டத்துக்குள் வரும் 60 பேரிடம் இன்று பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கான மாதிரிகளும், இரத்தமாதிரிகளும் கொழும்பு மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரிகளால் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.