கலைக்கப்பட்ட பாராளுமன்றம் என்பது மரணித்த உடலுக்கு ஒப்பானது. அவ்வாறு கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது மரணித்த உடலுக்கு மீண்டும் உயிர் கொடுக்க எடுக்கும் சாத்தியமில்லாதா முயற்சி என்கிறது அரசாங்கம்.
பாராளுமன்றம் கூட்டப்படாது போனாலும் நிதி அதிகாரத்தை கையாள ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளதெனவும் அரசாங்கம் தெரிவித்தது.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன அரசாங்கத்தில் நிலைப்பாட்டை அறிவிக்கையில் இதனைக் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
தற்போது கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டாலும் கூட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டும் எண்ணப்பாடு இல்லை. சாத்தியமில்லாத விடயங்களை முன்னெடுக்க முடியாது. மரணித்த பாராளுமன்றம் ஒன்றினை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது.
அதற்கு பதிலாக புதிய பாராளுமன்றம் கூட்டப்படுவதே ஆரோக்கியமான விடயமாகும். மரணித்த உடலுக்கு மீண்டும் எவ்வாறு உயிர் கொடுக்க முடியாதோ அதேபோன்றதே பழைய பாராளுமன்றத்தை கூட்டவும் முடியாது.
நிதி விடயம் குறித்தே இப்போது எதிர்தரப்பினர் வாதிட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் அரசியல் அமைப்பில் நிதி அதிகாரம் ஜனாதிபதியினால் கையாள முடியும் என்பதை தெளிவாக கூறியுள்ளனர்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த பாராளுமன்றம் கூடும் திகதியில் இருந்து மூன்று மாதகாலத்திற்கு அரச நிதி அதிகாரத்தை ஜனாதிபதி கையாள முடியும் என அரசியல் அமைப்பில் 150(3) ஆம் சரத்தில் தெள்ளத்தெளிவாக கூறப்பட்டுள்ளது.
கடந்த பாராளுமன்ற அமர்வுகளின் போது இடைக்கால கணக்கறிக்கை ஒன்றினை முன்னெடுக்க எதிர்க்கட்சிகளிடம் நாம் அனுமதி கோரினோம்.
ஆனால் நாம் சர்வதேச நாடுகளிடம் அனாவசியமாக கடன் வாங்கவே இவ்வாறு அனுமதி கோருவதாக எம்மை குற்றம் சுமத்தி கணக்கறிக்கையை தோற்கடிக்க நடவடிக்கை எடுத்தனர். இப்போது மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டி நிதி செயற்பாடுகளை கையாள வேண்டும் என கூறுகின்றனர்.
பாராளுமன்றம் செயற்பாட்டில் இருந்த காலத்தில் இவர்கள் எமக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
இப்போது பாராளுமன்றத்தை கலைத்து நாம் தன்னிச்சையாக அதிகாரங்களை கையாள முடியும் என்ற சூழல் உறவாகியுள்ள நிலையில் ஜனாதிபதிக்கு நிதி விடயங்களை கையாள முடியும் என்ற அங்கீகாரம் உள்ளதால் இவர்கள் அரசாங்கத்தை குழப்ப முயற்சிக்கின்றனர்.
பாராளுமன்றம் எப்போது கூடினாலும் அன்றில் இருந்து மூன்று மாத காலத்திற்கு ஜனாதிபதியால் நிதி அதிகாரங்களை கையாள முடியும் என்றார்.