சுதந்திரம் கிடைத்தது முதல் இதுவரை தமிழ் மக்களுக்கான உரிமைகள் கிடைக்கவில்லை. கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் தேவைக்காக தோற்றம் பெறவில்லை என அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியை மேற்கோள் காட்டி ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்படுள்ளதாவது,
“சுதந்திரம் கிடைத்தது முதல் இதுவரை தமிழ் மக்களுக்கான உரிமைகள் கிடைக்கவில்லை என்பதே உண்மை.
கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் தேவைக்காக தோற்றம் பெறவில்லை. தற்போது கூட்டமைப்பில் மூன்று கட்சிகளே உள்ளன காலத்துக்கு காலம் சில கட்சிகள் வருவார்கள் போவார்கள்.
கூட்டமைப்பை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்கும் எந்தவித எண்ணமும் இல்லை. இரா.சம்பந்தனே கூட்டமைப்பின் உண்மையான தலைவர்.
கூட்டமைப்பை நிர்வகிப்பது அவர் மாத்திரமே என்பதை தெளிவாக கூறுகின்றேன். என்னை கூட்டமைப்பின் தலைவர் என கூறுவதை நிராகரிக்கின்றேன்.
இலங்கையில் அனைத்து இன மக்களும் எந்தவித பாகுபாடும் இன்றி வாழ வேண்டும் என்பதே எனது நோக்கம், மாறாக நான் இனவாதியல்ல.
தற்போது வரையில் எனது அரசியல் தலைவர் சம்பந்தன் மாத்திரமே. ஆரம்பத்தில் ஜே.வி.பியோடு இணைந்து செயற்பட்டேன் என்பதற்காக தற்போது எனது தலைவர் அநுரகுமார திசாநாயக்க என கூற முடியாது.
நான் சகல கட்சிகளுடனும் இணைந்து செயற்படத் தயார். அரசியல் கைதிகளில் பலரை விடுவிக்க நான் செயற்பட்டுள்ளேன். காணி விடுவிப்பில் எனது பங்கும் உண்டு இது மக்களுக்கு தெரியும்.
புலம் பெயர் தமிழர்கள் அனுப்பும் பணத்தை கையாள்வது நான் என கூறுவதை முற்று முழுதாக நிராகரிக்கின்றேன்.
தற்போது வடக்கு மக்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் வசிக்கும் அவர்களது உறவினர்கள் அனுப்பும் பணத்தை கொண்டே ஜீவிக்கின்றனர்.
தற்போதைய நிலையில் மேலும் ஆறு மாதகாலம் வழங்கினாலும் ஐக்கிய தேசியக் கட்சி ஒன்று சேராது.
நான் சிங்கள மக்களை வைராக்கியதோடு நோக்குவதில்லை. இந்த முறை பொதுத் தேர்தலில் ஒரு இலட்சம் வாக்குகளை பெற்று வெற்றிப்பெறுவது நிச்சயம். இதனை ஒரு சவாலாக கூறி வைக்கின்றேன் என்றார்.
குறிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாகிய போது, தமிழர் அரசியலின் ஏகபோகமாகவோ, அதைத் தீர்மானிக்கும், கொண்டு நடத்தும் பலமான சக்தியாகவோ அது இருக்கவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இரண்டாம் பட்சமான, விடுதலைப் புலிகள் பங்குபெறாத, பங்குபெறுவதைத் தவிர்த்த ஜனநாயக அரசியல் வௌியை நிரப்புவதற்கு, ‘தமிழ்த் தேசியத்தின்’ அடிப்படைகளை முன்னிறுத்திய கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும்.
இதன் முக்கியத்துவம் கருதியே, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, இதன் உருவாக்கத்தை எதிர்க்கவில்லை. சிலகாலங்களிலேயே அது விடுதலைப் புலிகள் அமைப்பின் ஜனநாயக அரசியல் முகமாக, முகவராக மாறியிருந்தது; மாற்றப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில், சில மிக முக்கிய மைற்கற்கள் இருப்பதையும் இங்கு கருத்திற் கொள்வது அவசியமாகிறது.
அது, எதிரெதிர் துருவங்களாக நின்ற அரசியல் கட்சிகளையும் ஜனநாயக அரசியலில் ஈடுபட்டு வந்த ஆயுதக் குழுக்களையும் ஒன்றிணைத்த மிக முக்கிய சந்தர்ப்பமாகும்.
இந்த வரலாற்று உண்மையை எட்டி உதைக்க முடியுமா சுமந்திரனால் அதிலும் குறிப்பாக 2020தேர்தல் மேடையில் அவர் மேற் குறிப்பிட்ட தகவலை உரத்துக் கூற முடியுமா என அரசியல் அவதானிகள் கேள்வி எழுப்புகின்றனர்.