‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தின் நினைவுகளையும், ரஜினிகாந்த் தன்னை கிண்டலடித்ததையும் பதிவிட்டுள்ளார் நடிகை மீனா.
1984-ம் ஆண்டு கே.நடராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் அன்புள்ள ரஜினிகாந்த். இந்தப் படத்தில் அம்பிகா முக்கிய கதாபாத்திரத்திலும், மீனா குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருப்பார். இந்தப் படம் நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதை அடுத்து படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான நினைவுகளை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார் மீனா.
அதில், அம்பிகா மீது பால் ஊற்றும் காட்சி, ரஜினிகாந்த் சாக்லெட் கொடுக்கும் போது அதை கடித்து துப்பும் காட்சி ஆகியவற்றைக் குறிப்பிட்ட மீனா, தன்னுடைய குண்டான உருவத்தைப் பார்த்த ரஜினிகாந்த், தனது அம்மாவிடம் எந்தக் கடையில் அரிசி வாங்குகிறீர்கள் என்று கிண்டலடித்ததையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரஜினிகாந்த் கிண்டலடித்த இச்சம்பவத்தை இதுவரை யாரிடமும் சொல்லவில்லை என்றும் மீனா கூறியுள்ளார்.
படம் வெளியாகி 36 ஆண்டுகள் கழித்து நடிகை மீனா இதை ரசிகர்களிடம் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் அவர் நடித்த படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போது அந்தப் படம் குறித்து சில சுவாரஸ்யமான நினைவுகளை பகிர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.