கொழும்பில் ஐந்துவயது முதல் வாழ்ந்து சிங்கள நண்பர்களுடன் உண்டு உறவாடி வளர்ந்து வசித்து வந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு தமிழ்தேசிய உணர்வு இருக்கும் என எதிர்பார்ப்பது முட்டாள் தனம் என கூறினார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஊடக பேச்சாளருமான சுமந்திரன் சிங்கள தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி தொடர்பாக மேலும் கூறுகையில்,
விடுதலைப்புலிகளின் போராட்டத்தை தான் ஏற்கவில்லை அவர்களின் நடவடிக்கையை ஒருநாளும் ஏற்கவில்லை என தற்போது கூறும் சுமந்திரன், கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழ்தேசிய கூட்டமைப்பு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரோசம் இருந்திருந்தால் ஏற்று இருக்க கூடாது.
2015 இல் யாழ்மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மூலம் தேர்தல் வேட்பாளராக போட்டியிட்டு இருக்ககூடாது. இந்த தடவையும் தேர்தலில் போட்டியிடாமல் கௌரவமாக ஒதுங்கி இருக்கவேண்டும்.
ஏன் இதை நான் சொல்கிறேன் என்றால், விடுதலைபுலிகளின் கொள்கையை ஏற்காவிட்டால் அவர்களின் ஆயுத போராட்டத்தை ஏற்காவிட்டால் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பில் எப்படி உறுப்பினராகவோ, பாராளுமன்ற உறுப்பினராகவோ, போதாக்குறைக்கு ஊடக பேச்சாளராகவோ இருக்கமுடியும். அவர் இதை நெஞ்சில் கைவைத்து சொல்லட்டும் பார்ப்போம்.
புலிகளின் போராட்டம் இல்லை எனில் எப்படி சுமந்திரன் எம்.பி யாக வந்திருக்க முடியும்?. எப்படி ஐநா சபை சர்வதேசம் என சுமந்திரன் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருக்க முடியும்?. எப்படி புலம்பெயர் அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தி இருக்க முடியும்?. சிந்திக்க வேண்டிய விடயம்.
தான் இலங்கை தேசியகொடி, தேசியகீதம், எல்லாம் ஏற்றுக்கொண்டுள்ள ஒருவர், சிங்கள நண்பர் ஶ்ரீலங்கா நாடு என பெருமைப்படும் அவர் முடிந்தால் கொழும்பில் தேர்தல் கேட்டு வெல்ல முடியுமா? நூறு வாக்குகளை கூட கொழும்பில் பெறமுடியுமா? வாக்குகளை பெற மட்டும் வடக்கு கிழக்கு தாயகம் மற்றதெல்லாம் கொழும்பு வாழ்க்கை. இவருக்கு எப்படி தமிழ் மக்களின் வலி தெரியும்.
யாழ்மக்கள் அவருக்கு வாக்களித்தது அவர் தமிழ்தேசிய கூட்டமைப்பில் உள்ளதால் மட்டுமே. இந்த உண்மையை அவர் விளங்கி கதைக்க வேண்டும்.
பதவியை காப்பாற்ற புலிகளின் புகழ்பாடி நடிப்பு. மற்றப்படி சிங்கள ஆட்சியாளர்களுடைய நல்லபெயரை சம்பாதிப்பது. இந்த இரட்டைவேட அரசியலே இவரின் வாழ்க்கை.
அவரின் கருத்தானது தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக உள்ள கட்சிகளுக்கு தீனியாக அமைந்துவிட்டது.
தாம் தமீழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக சிங்கள ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவதாக தமிழ்மக்களின் தியாகத்தை மறந்து இப்படியான பச்சோந்தித்தனமான எட்டப்பன் கருத்துக்களை தெரிவிக்காமல் உண்மையை உணர்ந்து தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சாளராக செயல்படாவிட்டால் இதனால் கட்சிக்கு வரும் பின்னடைவுகளுக்கு அவரே முழுப்பொறுப்பும் எடுக்க வேண்டும்.
கட்சி தலைமையும் இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இனிமேலாவது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்துக்களை கூறுவதை உடனே நிறுத்த வேண்டும்.
அவரின் கருத்து தொடர்பாக இலங்கை தமிழரசு கட்சி மத்தியகுழுவை உடனடியாக கூட்டி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மேலும் கூறினார்.