கொவிட் -19 தொற்றுநோய் பரவல் குறித்த அவதானம் இருந்தாலும் கூட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு தளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
விரைவில் இவ்விரு மாவட்டங்களிலும் ஊரடங்கு தளர்க்கப்படும் என சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
விமான நிலையங்களை மீண்டும் திறப்பதில் சிக்கல் இருப்பதாவும் அவ்வாறு விமான நிலையங்களை திறந்தால் மீண்டும் வைரஸ் காவப்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாவும் அவர் தெரிவித்தார்.
கொவிட் -19 வைரஸ் பரவல் நிலையில் நாட்டின் செயற்பாடுகள் மற்றும் கொவிட் வேலைத்திட்டங்கள் குறித்த செயலணியின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான மருந்துகள் இன்னமும் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு உள்ளனர். பல்வேறு நாடுகளில் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் இன்னமும் பரிசோதனை மட்டமாகவே அவை கருதப்படுகின்றது.
அவ்வாறு இருக்கையில் இலங்கையில் மிகவும் உயரிய மட்டத்தில் எமது சுகாதார அதிகாரிகளின் அனுபவங்களை கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்தியுள்ளோம்.
இது எமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். எனினும் நாம் தொடர்ந்தும் அவதானமாக செயற்பட்டு எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
மிக நீண்ட காலத்திற்கு நாம் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியை கையாண்டு எமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
கொவிட் -19 வைரஸ் பரவல் குறித்த அச்சுறுத்தல் இருந்தாலும் கூட முன்னர் இருந்த பதட்ட நிலைமை இப்போது இல்லை என்பதை உறுதியாக கூற முடியும்.
அதேபோல் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு நீடிக்கின்றமைக்கு சில முக்கிய காரணிகள் உள்ளது. இவ்விரு மாவட்டங்களுமே சனத்தொகை கூடிய மாவட்டமாகும்.
அதுமட்டும் அல்ல கொழும்பை எடுத்துக்கொண்டால் சிறிய இடப்பரப்பில் மிக அதிகமான மக்கள் வாழ்கின்றனர். பண்டாரநாயக பிரதேசம் அவ்வாறான ஒரு பகுதியேயாகும்.
இந்த பகுதிகளில் ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டால் சகலருக்கும் பரவக்கூடிய வாய்ப்புகள் மிக அதிகமாகும். நகர் பகுதிகள் என்ற காரணத்தினால் முற்றுமுழுதாக நோய் தாக்கம் விடுவிக்கப்படும் நிலையில் இப்பகுதிகளை வழமைக்கு கொண்டுவருவதே ஆரோக்கியமான நகர்வாக அமையும்.
எவ்வாறு இருப்பினும் வெகு விரைவில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு தளர்க்கப்படும். தொடர்ந்தும் ஊரடங்கு பிறப்பித்து இவ்விரு மாவட்டங்களையும் கட்டுப்படுத்த முடியாது.
ஆகவே இது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. இந்த காரணிகளில் மக்களின் கட்டுப்பாடு மிகவும் அவசியமாகும். மக்கள் ஒரு வாரம் கட்டுப்பாட்டுடன் நடந்து அடுத்த வாரமே பழைய நிலைமையை ஏற்படுத்தினால் நிலைமைகள் மோசமாக அமையும்.
நாடு விடுவிக்கப்பட்டவுடன் மீண்டும் நோய் பரவல் ஏற்பட்டால் அதன் தாக்கம் மிகவும் மோசமாக அமையும். குறிப்பாக விமான நிலையங்களை திறப்பதன் மூலமாக மீண்டும் நோய் காவுதல்கள் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. இப்போது எமக்குள்ள மிகப்பெரிய பிரச்சினையும் இதுவேயாகும்.
ஆகவே இந்த சிக்கல்களை கையாள ஏதேனும் மாற்று நடவடிக்கைகளை முன்னெடுத்தாக வேண்டும். அதேபோல் ஊரடங்கு காலத்திலும் கூட கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் அன்றாட செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளது. பாடசாலைகள் ஆரம்பிக்க சற்று தாமதமாகலாம்.
பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டிய தேவை இப்போது இல்லை. சகல நிலைமைகளும் சீராக உள்ளதென உறுதிப்படுத்திய பின்னர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்றார்.