பொதுமக்கள் மத்தியில் அமைதியை தொடர்ந்து பேணுவதற்காக ஆயுதம் தரித்த படையினர் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவது தொடர்பான உத்தரவை தொடர்ந்து நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இன்று (22) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் நீக்கப்பட்டதையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் கீழ், ஜனாதிபதியால் பாதுகாப்பு நடவடிக்கையில் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதற்கமைய நாடு முழுவதிலும் உள்ள நிர்வாக மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கையில் முப்படையினரை ஈடுபடுத்தும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.