கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளது.
ஏனைய 23 மாவட்டங்களிலும் இன்று சனிக்கிழமை இரவு 8 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் வரும் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கே தளத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் நேற்று அறிவித்தது.
நாடுமுழுவதும் நாளையும் நாளைமறுதினம் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தும் நிலையில் 900 வீதிச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என்று கோவிட் -19 நோயைக் கட்டுப்படுத்தும் தேசிய செயலணியின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.
இதன்மூலம் நாடுமுழுவதும் 57 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் பொலிஸாரின் சிறப்புச் சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
நாடுமுழுவதும் 900 வீதிச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வீதிகளில் வாகனங்களில் செல்வோர் கட்டாயம் சோதனைக்குட்படுத்தப்படுவர்.அத்தோடு பொலிஸ் மோட்டார் வாகன அணி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் வீதிகளில் வாகனங்களில் நடமாடுவோர் கைது செய்யப்படுவர்.
ரமழான் பண்டிகையை இஸ்லாமிய மக்கள் வீடுகளில் இருந்து கடைப்பிடிக்கவேண்டும். தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது செயற்படுவோர் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்படுவர்” என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.