டெல்லியில் மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், கணவன் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்ய முயற்சித்ததில் குண்டு மனைவி கழுத்தில் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள குருகிராமில் ராம்புரா பகுதிக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் ஒரு தம்பதி குடியேறினர். அதில் கணவருக்கு 34 வயதாகிறது. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து மதுராவில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வந்தார்.
அப்போது அங்கு சந்தித்த ஒரு பெண்ணை கடந்த 2019ஆம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த பெண் தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார்.
இந்த நிலையில் மனைவியை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்து சென்றார். அப்போது காரில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதால் காரில் இருந்த துப்பாக்கியை எடுத்த கணவர் தன்னை தானே சுட்டுக் கொண்டார். இதில் காதில் பாய்ந்த புல்லட் தலை வழியாக பாய்ந்து அருகில் அமர்ந்திருந்த மனைவியின் கழுத்தில் பாய்ந்தது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்றவர் அளித்த புகாரின் பேரில் இருவரையும் பொலிஸார் மீட்டு சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர். கணவர் மயங்கி நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். 7 மாத கர்ப்பிணியான மனைவி அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
லாக்டவுனால், வியாபாரம் குறைந்ததால் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தனது மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டு செல்ல விரும்பினார். ஆனால் மனைவியோ தாய் வீட்டுக்கு செல்ல முடியாது என்றும் கணவனுடன்தான் இருக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு துப்பாக்கியால் சுடும் அளவுக்கு சென்றுவிட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.