கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள இந்நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா பெற்றுக்கொள்ள இதுவே சிறந்த சந்தர்ப்பம் என்று எண்ணுகின்றார்.
அதன் காரணமாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான தொலைபேசி உரையாடலின் போது இது பற்றி நினைவுபடுத்தியுள்ளார் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தெரிவித்துள்ளது.
எனவே கொரோனாவிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதைப் போன்றே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தையும் பாதுகாப்பதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படும் என்றும் ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று சனிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தொலைபேசி மூலம் உரையாடியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இவ்விடயம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வு பேஸ்புக் பக்கத்தில் கருத்தியை பதிவிட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்கவே இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது :
வழமையாக அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா போன்ற பலம் வாய்ந்த பெரும்பாலான நாடுகளின் தலைவர்கள் பிரிதொரு நாட்டின் தலைவரிடம் தமது நாட்டின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஆலோசனைக்கமையவே உரையாடுவர். நான் அறிந்த வகையில் இவ்வாறான கலந்துரையாடல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவ்வாறு பதிவு செய்யப்பட்ட அனைத்தும் உத்தியோகபூர்வ இராஜதந்திர கலந்துரையாடல்களாக ஏற்றுக் கொள்ளப்படும். அவ்வாறின்றி இவ்விடயம் அயல் நாட்டு நண்பருடன் பேசுவதைப் போன்று சாதாரணமானதல்ல.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறான விதிமுறைகளை அவர் பதவி ஏற்ற காலம் முதலே புறக்கணித்து வந்ததால் அவர் மேற்கொண்டுள்ள இவ்வாறான கலந்துரையாடல்களில் கூறிய விடயங்களை மீண்டும் மீண்டும் வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு நினைவுபடுத்த வேண்டியேற்பட்டுள்ளது.
எனவே குறிப்பாக இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்துடன் கலந்தாலோசித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கொரோனா தொடர்பில் கலந்துரையாடும் போது, கொரோனாவுடன் எவ்வித தொடர்பும் அற்ற கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் பற்றி நினைவுபடுத்தியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிகாலத்தில் அப்போதைய துறைமுக அபிவிருத்தி அமைச்சராக இருந்த சாகல ரத்நாயக இந்த துறைமுக பகுதியை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். குறித்த திட்டமானது முழுமையாக இந்தியாவினுடையதென்றாலும் ஜப்பானின் நிறுவனமொன்றும் காணப்பட்டது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் 95 வீதம் நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலையில், துறைமுகத்தின் அனைத்து சேவை சங்கங்களும் குறித்த முனையத்தை விற்க வேண்டாம் என்றும் அதனை அரசாங்கத்தின் உரித்தாகவே வைத்திருக்குமாறும் தாம் இதன் மூலம் இலாபத்தைப் பெற்றுத்தருவதாகக் கூறிய போதிலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
காரணம் கொழும்பு துறைமுகத்தின் தென்முனையத்தை மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த போது சீனாவிற்கு வழங்கியதால், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதற்கு அப்போதிருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தீர்மானித்தது.
எனினும் அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் சிக்கலுடன் ஊழியர்களின் எதிர்ப்பினால் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் செல்லுபடியற்றதானதால் தனியார் மயமாக்கல் திட்டத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாமல் போனது.
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள இந்நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா பெற்றுக்கொள்ள இதுவே சிறந்த சந்தர்ப்பம் என்று எண்ணுகின்றார்.
கொழும்பு துறைமுகத்தின் எந்த முனையமானாலும் அது நாட்டின் எதிர்காலத்திற்கு உதவுவதாகவே இருக்கும். மில்லேனியம் சவால் ஒப்பந்தத்தை இரத்து செய்வதாகக் கூறி ஆட்சியைப் பொறுப்பேற்று இதுவரையில் அதற்கான நடடிக்கை எதனையும் எடுக்காத கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் கொழும்புதுறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு தனியார் மயமாக்கல் செய்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ஐ.தே.க. அரசாங்கமே என்று கூறிக் கொண்டு இதனை இந்தியாவிற்கு விற்று இந்த விடயத்தை முடிவுக்கு கொண்டுவரக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
காரணம் ஐ.தே.க. அரசாங்கத்தால் விற்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தை மீண்டும் பெற்றுக் கொள்வதாகக் கூறி ஆட்சியைப் பொறுப்பேற்ற ராஜபக்சக்கள் அதனை மீண்டும் சீனாவுக்கே 99 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்க நடவடிக்கை எடுத்தமையாலாகும்.
எனவே கொரோனாவிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதைப் போன்றே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தையும் பாதுகாப்பதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படும்.