கேரளமாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர் உத்ரா. இவருக்கும் தனியார் கம்பெனியில் கிளர்க்காகப் பணிபுரியும் சூரஜ் என்பவருக்கும் 2018 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. திருமணத்தின்போது 100 பவுன் நகைகள், ஐந்து லட்சம் ரூபாய், சொத்து, கார் என நிறைய வரதட்சணை கொடுத்துள்ளார்கள்.
இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது..
கைநிறைய வரதட்சணை வாங்கியும் திருப்தி அடையாத சூரஜ் மற்றும் அவரது உறவினர்கள் மேலும் வரதட்சணைக் கேட்டு உத்ராவுக்கு மனதளவில் தொல்லை கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி சூரஜின் பறக்கோட்டு பகுதியில் உள்ள வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த உத்ராவின் காலில் ஏதோ கடித்ததாக உணர்ந்துள்ளார்.
அவர் சத்தம்போட்டு அலறியதால் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் சோதித்ததில் பாம்பு கடித்திருப்பதாகக் கூறியதை அடுத்து திருவல்லாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் இருந்த உத்ரா பின்னர் 16 நாள்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஜ் ஆனாலும் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறியதால் கொல்லம் அஞ்சல் பகுதியில் உள்ள தாய் வீட்டில் வசித்தார் உத்ரா.
இந்தநிலையில்தான் கடந்த 6ஆம் தேதி காலையில் நீண்டநேரமாக உத்ரா படுக்கையில் இருந்து எழவில்லை. அவரது தாய் எழுப்பியபோதும் அசைவில்லை.
இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்ராவின் காலில் பாம்பு கடித்ததற்கான அடையாளம் இருந்தது. உத்ரா தூங்கிய அறையில் உள்ள உடை மாற்றும் பகுதியில் மூர்க்கன் வகை பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது.
உத்ரா இறந்ததற்கு முந்தினநாள் அவரின் கணவர் சூரஜ் அங்கு வந்திருக்கிறார். முந்தின நாள் இரவு சூரஜும் உத்ராவும் அந்த அறையில்தான் துங்கியுள்ளனர். அதிகாலை 5 மணிக்கெல்லாம் சூரஜ் அறையிலிருந்து எழுந்து வெளியே சென்றுவிட்டார்.
ஏ.சி அறை என்பதால் ஜன்னல்கள் எல்லாம் மூடப்படிருந்தது. அப்படி இருக்கும்போது பாம்பு எப்படி வந்தது என்று உத்ராவின் பெற்றோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
உத்ரா இறந்த சமயத்தில் சூரஜின் செயல்பாடுகளும் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக அஞ்சல் காவல் நிலையத்தில் உத்ராவின் பெற்றோர் புகார் அளித்தனர்.
முதன்முறை பாம்பு கடித்த மார்ச் 2ஆம் தேதிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு பெட்ரூம் அருகில் பாம்பு ஒன்றைக் கண்டதாகவும்.
பயத்தில் அலறியதால் சூரஜ் அங்கு வந்து பாம்பை வெறும் கைகளால் பிடித்து சாக்கில் போட்டு எடுத்துச் சென்றதாகவும் உத்ரா ஏற்கனவே தெரிவித்திருந்தார். எனவே இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என உத்ராவின் பெற்றோர் கூறினர்.
இந்த வழக்கு நேற்றுமுன்தினம் மாலை கிரைம் பிரான்ச் ஏற்றெடுத்தது. கிரைம் பிரான்ச் டி.எஸ்.பி அசோக்குமார் தலைமையில் விசாரணை முடுக்கிவிடப்பட்டது. உத்ராவின் கணவர் சூரஜிடம் விசாரணை நடத்தப்பட்டது. சில மணி நேர விசாரணைக்குப் பிறகு உத்ராவின் மரணம் கொலை எனத் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “சூரஜிடம் விசாரணை நடத்துவதற்கு முன்பு அவரது மொபைல்போனை சோதித்தோம். உத்ராவை முதலில் பாம்பு கடித்த மார்ச் 2ஆம் தேதிக்கு முந்தினநாள் வரை அடூரைச் சார்ந்த பாம்பாட்டி ஒருவரிடம் போனில் பேசியிருப்பது கண்டறியப்பட்டது. அந்தப் பாம்பாட்டியைப் பிடித்து விசாரணை நடத்தியபோது கருமூர்க்கன் என்ற கொடும் விஷம் கொண்ட பாம்பை 10,000 ரூபாய் கொடுத்து சூரஜ் விலைக்கு வாங்கியது தெரியவந்தது.
ஜன்னல் வழியாகப் பாம்பு புகுந்திருக்கலாம் என சூரஜ் முதலில் தெரிவித்தார். தரையில் இருந்து வீட்டின் இரண்டாவது மாடிக்கு பாம்பு செல்வது என்பது சாத்தியம் இல்லாதது.
அப்படி ஜன்னல் வழியாகப் பாம்பு சென்றிருந்தாலும் முதலில் படுத்திருந்த சூரஜ், அதற்கு அடுத்து படுத்திருந்த அவர்களது மகனையும் தாண்டிச் சென்று உத்ராவை பாம்பு எப்படி கடிக்கும் எனக் கேட்டோம். சூரஜ் பதில்கூற முடியாமல் நின்றார்.
மனைவியைக் கொலை செய்வதற்காக ஆறு மாதங்களாகப் பாம்பாட்டியிடம் சூரஜ் போனில் பேசிவந்துள்ளார். சூரஜுக்கு பாம்பு விற்பனை செய்த கல்லுவாதக்கல் பகுதியைச் சேர்ந்த சுரேஷையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.
இந்த வழக்கில் சூரஜின் உறவினர்கள் இரண்டு பேரையும் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்ரா கொலைக்கு வரதட்சணை பிரச்னை மட்டும் காரணமா, வேறு காரணம் உள்ளதா என்ற ரீதியிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.