கிண்ணியாவில் சிம் அட்டை வியாபார முகவர்களின் இரு குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக அப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.ஏம்.ஏ.அஜித் நேற்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிண்ணியா பைசல் நகர் மற்றும் ரஹ்மானியா நகர் ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள இரு குடும்பங்களே இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன.
கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளரின் உத்தரவுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இந்த இரு சிம் அட்டை வியாபார முகவர்களும் திருகோணமலை சீனக் குடாவில் உள்ள கிளப்பன்பேக் இராணுவப் படைத்தளத்தில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் உள்ளவர்களுக்கு கடந்த 2020.05. 20 ஆம் திகதி சிம் அட்டைகளை விற்பனை செய்யச் சென்றவர்களாவர்.
அந்த முகாமில் குவைத், கட்டார் போன்ற நாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்த 136 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள்.
இவர்களின் இரத்த மாதிரிகள் நேற்று முன்தினம் (26) கொழும்புக்கு அனுப்பி கோரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்ட போது, இவர்களில் 7 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இவர்கள் வழங்கிய தகவலையடுத்து சிம் அட்டை முகவர்கள் இருவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரோடு, மேலும் திருகோணமலை, கந்தளாய் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இருவருமாக மொத்தம் 4 முகவர்கள் வியாபார நோக்கமாக இந்த தனிமைப்படுத்தல் முகாமுக்குச் சென்று வந்திருக்கிறார்கள் என்ற தகவல் கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளருக்கு கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, றஹ்மானியா பிரதேசத்திலுள்ள சிம் அட்டை முகவரின் வீட்டிற்கு சென்று வந்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரையும் சுய தனிமைப்படுத்தியுள்ளனர்.
கடந்த 20 ஆம் திகதியில் இருந்து இவர்கள் இருவரும் சென்று வந்த இடங்கள், அவர்கள் தொடர்பு கொண்ட நபர்கள் குறித்து முழுமையான தகவல்களைப் பெறுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இதற்காக சுகாதாரப் பிரிவினர், பொலிஸார், பொதுமக்கள் என பல்வேறு பிரிவினர்களின் ஒத்துழைப்பையும் கோரியிருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.