தனது ஐம்பது வருட நாடாளுமன்ற வாழ்க்கையில் தான் சந்தித்த மோசமான நிகழ்வுகள் மற்றும் கொண்டாடக்கூடிய நிகழ்வுகள் எவை என்பதை மனந்திறந்து தெரிவித்துள்ளார் பிரதமர் மகிந்த ராஜபக்ச.
இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த நீண்ட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த செவ்வியில் அவர் தெரிவித்த விடயங்கள் வருமாறு
கடந்த 50 வருடங்களில் உங்கள் வாழ்க்கையில் சிறந்த மற்றும் மோசமான நிகழ்வுகள் எவை? கொண்டாடக் கூடிய சில நிகழ்வுகள் மற்றும் மறக்க விரும்பும் நிகழ்வுகள்?
30 வருடங்கள் முடிவில்லாமல் நீண்ட போரைமுடிவுக்கு கொண்டுவந்தது என்னுடைய சிறந்த பொழுது. மீண்டும் ஒருமுறை எங்களுடைய குழந்தைகள் தீவிரவாதத்துக்கு பலியாகாது. மீண்டும் ஒருமுறை காரணமில்லாமல் போரில் ரத்தம் சிந்தாது. 2015 – 2019-க்கு இடைப்பட்ட காலத்தில் என்னை மற்றும் என்னுடன் தொடர்புடையவர்களை நடத்திய விதம் நான் மறக்க விரும்பும் மோசமான மற்றும் வலிநிறைந்த அனுபவம். சுதந்திரத்தின் பிறகான வரலாற்றில் எந்த ஒரு அரசியல் தலைவரும், ஜனநாயக எதிர்க்கட்சித் தலைவரும் இப்படி ஒரு கொடிய அமைப்பு சார்ந்த தண்டனை அனுபவித்திருப்பார்கள் என்று நம்பவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், எனக்கு ஆதரவாக இருந்த தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் முந்தைய அரசால் கேள்வி கேட்பதற்காக இழுத்துச் செல்லப்பட்டனர்.
சிலர் சிறைவைக்கப்பட்டனர். கடற்படையில் அதிகாரியாக பணியாற்றும் என்னுடைய மகன் யோஷித். அவர் என்னுடைய அரசியலுக்காக எதுவும் செய்தது கிடையாது. அவரும் சிறைவைக்கப்பட்டார். எனக்கு ஆதரவு அளித்த எம்.பிக்கள் அவர்களுடைய கட்சி பதவிகளை இழக்கவேண்டியிருந்தது. கோத்தபயாவும் நேரடியாக குறிவைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார்.
இது மிகவும் வலிகள் நிறைந்தது மற்றும் வருத்தமானது. நான் ஆட்சியில் இருந்த 2005-2015 காலகட்டத்தில், ஜனநாயக எதிர்கட்சியாளர்களை நான் ஒருபோதும் தண்டித்தது கிடையாது. துன்புறுத்தியது கிடையாது. நாங்கள் அதனை செய்து நேரத்தை வீணடிக்கவிரும்பவில்லை. நாங்கள் போரில் வெற்றிகொள்வதில், நாட்டை வளர்ச்சியடையச் செய்வதில், விவசாயத்தை வலுப்படுத்துவதில், இலங்கையை சுயசார்பாக்குவதில் பரபரப்பாக இருந்தோம்.
நீங்கள் தீவிரமான அரசியலில் 50 ஆண்டுகளைக் கடந்துள்ளீர்கள். சார்க் நாடுகளில் ஒரு நாட்டை வழிநடத்தும் தலைவர்களில் நீங்கள் தான் மிகவும் மூத்த அரசியல் தலைவர். இந்த 50 வருட பொது வாழ்க்கை குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
இந்த 50 வருடங்கள் நிச்சயமாக சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக இருந்தன. இந்த ஒட்டுமொத்த காலங்களில் இடைவேளைகளின் போது மட்டுமே அமைதியாக இருக்க முடிந்தது. 1970-ம் ஆண்டு மே மாதம் நான் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றரை ஆண்டுகளில் ஜனதா விமுக்தி பெரமுனாவின் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியால் இலங்கை பெரும் அழிவைச் சந்தித்தது.
2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் நான் இலங்கையின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது விடுதலைப் புலிகளை எதிர்கொண்டது மிகப் பெரும் சவாலாக இருந்தது. எங்களால் சவால்களை எதிர்கொண்டு அதைக்கடந்து வரமுடிந்தது. திரும்பிப் பார்க்கும்போது, என்னால் 50 வருடங்கள் அரசியலில் இருந்து பொதுமக்களுக்கு சேவை செய்ய முடிந்ததுள்ளது. அதற்கு, நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
ஒரு அதிபராக 2005 மற்றும் 2015 காலகட்டத்தில் விடுதலைப் புலிகளை அழித்துள்ளீர்கள். 50 ஆண்டுகளில் நீங்கள் எதிர்கொண்ட விவகாரங்களில் இது மிகவும் கடினமானது என்று கருதுகிறீர்களா?
அது எந்த தலைவருக்கும் மிகவும் கடினமான பணியாக இருந்திருக்கும். இராணுவம், கடற்படை, விமானப் படை, காவல்துறையின் தலைமையில் சிறந்த அனுபவம் பெற்றிருந்த குழுக்களைப் பெற்றிருந்தேன். படைகளை மேலாண்மை செய்வது என்பது மிகவும் முக்கியமானது. அந்தப் பணிக்கு ஒரே ஒருவரைத்தான் என்னால் நம்ப முடியும் என்பது எனக்குத் தெரியும். அது என்னுடைய இளைய சகோதரர். 2005-ம் ஆண்டு நான் அதிபராக பதவியேற்றவுடன் கோத்தபாயவை பாதுகாப்புச் செயலாளராக நியமித்ததுதான் நான் செய்த முதல் நியமனம். இந்தப் போரில் ஈடுபட்ட நம் எல்லோருக்கும் இது மிகப் பெரிய சாதனை. அதைக் கடந்து விடுதலைப் புலிகளை தீவிரவாத அமைப்பு என்று எப்.பி.ஐ குறிப்பிட்டது முக்கியமானது.
2015-2019-ம் ஆண்டுகளில் நீங்கள் ஆட்சியில் இல்லை. அந்த காலங்கள் பற்றி கூறுங்கள்?
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, நான் இங்கிருந்து நேரத்தை வீணடிக்கவில்லை. வீரகெட்டியாவிலுள்ள என்னுடைய வீட்டுக்குச் சென்று குடும்பத்துடன் என்னுடைய நேரத்தை செலவு செய்தேன். இருப்பினும், மக்கள் என்னை மீண்டும் வந்து தலைமையேற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். நான் சுற்றிப் பார்க்கும்போது, உளவுத்துறை அதிகாரிகளின் துன்புறுத்தல்களால் இலங்கையின் அரசியல் தலைமை எப்படி நொருக்கப்படுகிறது என்பதைப் பார்த்தேன். அப்போது, என்னுடைய பணி இன்னும் முடிவடையவில்லை என்று உணர்ந்துகொண்டேன்.
இந்த நாட்டின் தந்தையாக அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்க வேண்டிய என்னுடைய வேலை. ஆட்சியாளர்களின் செயல்பாடுகளுக்கு அவர்கள் பொறுப்பு என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டேன். மேலும், வருங்கால நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேர்மையாகவும், பொறுப்புணர்வுடனும் இருக்க முன்மாதிரியாக இருந்தேன்.
1985-ம் ஆண்டு சார்க் அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து நீங்கள் அதைப் பார்த்துள்ளீர்கள். அது தற்போதும் பொருத்தமானது என்று நினைக்கிறீர்களா?
பிராந்திய ஒத்துழைப்பு என்பது முக்கியமானது. இது முற்றிலுமாக அவசியமானது. இதுதான் நம்மை இன்னமும் வலுவாக இருக்கச்செய்கிறது. உறுப்பு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனையின் காரணமாக சார்க் அமைப்பு செயல்படாமல் இருக்கலாம். பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால், நாம் பேச்சுவார்தையை தொடங்குவதற்கான பாதைகளை திறந்தநிலையில் வைத்திருக்கவேண்டும். இடம் மற்றும் பிராந்திய உறுப்பினர்களின் அடிப்படையில் ஒத்துழைப்பு தொடங்கும்.
உங்களுடைய ஆட்சியின் கீழ் இலங்கை சிறந்த சுற்றுலா தலமாக உருவானது. தற்போது கொரோனாவால் சுற்றுலாத்துறை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனைத் தீர்க்க வழி என்ன?
உலகம் முழுவதும் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டிருந்தாலும், கடந்த ஆண்டு ஈஸ்டர் நாளின் போது நடந்த தாக்குதலினால் ஏற்கனவே சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டிருந்தது. அந்த பாதிப்பு இன்னமும் இருக்கிறது. சுற்றுலா பாதித்துள்ள இந்தக் காலகட்டத்தில் சுற்றுலாத்துறையை சார்ந்தவர்களின் வாழ்வாதரத்தை உறுதி செய்துள்ளோம்.
தற்போது, உங்களுடைய இளைய சகோதரர் கோத்தாபய ராஜபக்ச அதிபராக இருக்கிறார். நீங்கள் பிரதமர். இந்த ஆட்சியை வரும் காலத்தில் எப்படி வரையறுக்கப் போகிறீர்கள் என்று முரண்பட்ட தகவல்கள் உள்ளன. நீங்கள் நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் சம்பிரதாய அதிபர் முறைக்கு திரும்பப் போகிறீர்களா?
எந்த புதிய அரசியல்சாசன திருத்தமாக இருந்தாலும் புதிய நாடாளுமன்ற கூட்டத்துக்குப் பிறகு ஆலோசனை செய்து கொண்டுவரப்படும். தற்போதைய அரசியலமைப்பு மற்றும் 19-வது திருத்தத்துடன் நாங்கள் தொடர முடியாது என்று உலகமே ஒப்புக்கொள்ளும் என்று நான் நினைக்கிறேன்.
கடந்த 50 ஆண்டுகளில் இந்திய – இலங்கை உறவுகளில் என்னென்ன விஷயங்கள் சரியாக இருந்தது? எது தவறாக இருந்தது?
இந்திய – இலங்கை இடையிலான இருநாட்டு உறவில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தன. 1980 மற்றும் 2014 ஆண்டுகளில் இருநாட்டு உறவுகள் மோசமடைந்தபோது இருநாடுகளுமே பாதிக்கப்பட்டன. 1948 மற்றும் 1980-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய – இலங்கை உறவு சிறப்பானதாக இருந்தது. இருநாடுகளுக்கிடையே வலுவான உறவு இருந்த முந்தைய காலத்தை நோக்கி நாம் சென்றிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். எல்லா அரசுகளின் போதும் இருநாட்டின் தரப்பிலும் இதுதொடர வேண்டும்.
நீங்கள் பின்னோக்கி திரும்பிப் பார்க்கும்போது யாரை எல்லாம் நினைத்துப் பார்ப்பீர்கள்? யாரெல்லாம் உங்களுக்கு வழிகாட்டியாக இருந்தார்கள்? யாரெல்லாம் உங்களுக்கு சவாலாக இருந்தார்கள்?
தொடக்க காலத்திலிருந்தே, என்னுடைய அம்மா நான் அரசியலுக்கு வருவதை ஊக்குவித்தார். என்னுடைய வாழ்க்கையை செதுக்கியதற்கு அவருக்கு நான் எப்போதும் நன்றியுணர்வுடன் இருப்பேன். 1970-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்து இந்த நாட்டுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கு நான் நன்றியுடன் இருப்பேன். இந்த இரண்டுபேரும், நான் தற்போது நான் இருக்கும் நிலைக்கு என்னைச் செதுக்கியவர்கள் ஆவர்.
தமிழர்களின் பிரச்னைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாக நினைக்கிறீர்களா?
இந்தக் கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன்னதாக, இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்னையும், தமிழ் அரசியல்வாதிகளின் பிரச்னையும் வேறு வேறு என்பதை தெரிவிக்க வேண்டியது முக்கியமானது. மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பதும் அவர்களுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதும் முன்பு அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்த வாய்ப்புகளை பல திட்டங்கள் மற்றும் வளர்ச்சியின் மூலம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதும் எனது விருப்பமாக இருந்தது. எப்படியிருந்தாலும், அரசியல்வாதிகளுடன் இணைந்த அந்தச் சாலை மிகவும் நீண்டதாக கடினமாக இருந்தது.
வடகிழக்கு பகுதிகளை தனி நாடாக்க வேண்டும் என்ற சிந்தனையின் மூலம் இந்த நாட்டில் தமிழ் அரசியல் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தியது. இது நடைமுறை சாத்தியக் கோரிக்கையல்ல.
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைத் தாண்டி ஏராளமான தமிழர்கள் வசித்துவருகிறார்கள். கிழக்குப் பகுதிகளில் தமிழர்கள் சிறுபான்மையினர். கொழும்பு நகரில் தமிழ் மற்றும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினர். இலங்கையில் மக்கள் கலந்து அழகாக வாழ்கின்றனர். தனிநாடு என்பது சாத்தியமானது அல்ல. தமிழ் அரசியல்வாதிகள் களயதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல சரிசெய்துகொள்ளவேண்டும்.
தீவிரவாதம் அதிகரிக்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ் கூட இலங்கையில் நுழைந்துள்ளது. இது அச்சமூட்டுவதாக இல்லையா?
உண்மையில் இது ஒரு தீவிரமான விவகாரம். முந்தைய அரசால் இதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இது கடந்தவருடம் வெளிப்படையாக தெரிந்தது. ஒருவேளை அவர்கள் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால் இந்தியா மற்றும் வங்க கடலை ஒட்டிய நாடுகளுக்கு ஆபத்தாக அமைந்திருக்கும்.
ஈஸ்டர் ஞாயிறன்று இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு ஆசியாவில் பொதுமக்கள் மீது ஐ.எஸ்.ஐ.எஸ் நடத்திய மிகப் பெரிய தாக்குதல். எல்லா தற்கொலைப் படையினரும் நன்கு படித்தவர்கள் வசதியான இலங்கை குடிமக்கள். அந்த நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தக் கூடிய அத்தனை தகவல்களையும் அப்போது அரசு கொண்டிருந்தது.
எப்படியிருந்தாலும், நாங்கள் தற்போது இதனைக்கட்டுக்குள் வைத்திருக்கிறோம். நாங்கள் மீண்டும் ஒருமுறை எங்களுடைய உளவுத்துறையை வலுப்படுத்தியுள்ளோம். சர்வதேச உளவுத்துறை அமைப்புகளுடன் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம். அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டிய அவசியத்தையும் உணர்ந்துள்ளோம்.
இலங்கை சீனாவுடன் ஒப்பந்தம் கொண்டுள்ளது. கொரோனாவுக்குப் பிந்தைய உலகம் உங்களுடைய ஏற்பாட்டை மாற்ற நிர்ப்பந்திக்கும் என்று நினைக்கிறீர்களா?
அனைத்து நாடுகளுடனும் இலங்கை அணி சேராக் கொள்கையைப் பின்பற்றுகிறது. இந்தியா மற்றும் சீனா இருவரும் மதிப்புமிக்க நண்பர்கள். ஜவஹர்லால் நேரு மற்றும் சீனாவின் தலைவர் சூ என்லாய் இருவரும் சேர்ந்து இருநாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்காக பஞ்ச சீலக் கொள்கையை உருவாக்கினர். அந்தக் கொள்கையைத் தான் நாங்களும் ஏற்றுக்கொண்டுள்ளோம். வரும் காலங்களில் அதனைப் பின்பற்றுவோம்.