ஜனநாயக நாடொன்றில் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றம் அத்தியாவசியமானதாகும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்திரமாக நம்புகிறது.
எனவே தேர்தலை காலம் தாழ்த்த வேண்டிய தேவை ஆணைக்குழுவுக்கு கிடையாது. சுகாதார பாதுகாப்பு ஆலோசனை வழிகாட்டல்களுக்கு அமைய கூடிய விரைவில் தேர்தலை நடத்துவதற்கே ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
அத்தோடு தேர்தலை நடத்துவதற்கு பொறுத்தமான தினத்தை தீர்மானிப்பதில் ஆணைக்குழுவுக்கு சட்ட ரீதியாக தடை ஏற்படாவிட்டால் தேர்தலுக்கான புதிய தினத்தை தீர்மானிக்க முடியும் என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை இது தொடர்பில் விசேட அறிவித்தலொன்றை விடுத்து இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் அதில் மேலும் கூறுகையில்,
பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் பெரும்பாலானவர்கள் குறிப்பாக அரசியல்வாதிகள், சிவில் சமூக அமைப்புக்கள், ஊடகங்கள், பொறுப்புடைய பிரஜைகள் உள்ளிட்ட பலரும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கேள்வியெழுப்புகின்றனர்.
தற்போது ஆணைக்குழு சார்பில் முன்னிலையாகியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணிகள் ஊடாக இம்மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது என்று நீதிமன்றுக்கு அறிவித்துள்ளோம்.
இந்நிலையில் தேர்தலை நடத்துவதற்காக பொறுத்தமான தினத்தை தீர்மானிப்பது தொடர்பில் சட்ட ரீதியான தடைகள் ஆணைக்குழுவுக்கு ஏற்படாவிட்டால் வேறு தினத்தை தீர்மானிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளுக்கு அமைய கூடிய விரைவில் தேர்தலை நடத்துவதே ஆணைக்குழுவின் எதிர்பார்ப்பாகும். தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான எந்த அவசியமும் ஆணைக்குழுவுக்கு கிடையாது.
ஜனநாயக நாடொன்றில் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றம் அத்தியாவசியமானது என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்திரமாக நம்புகிறது எனத் தெரிவித்தார்.