வெளிநாடுகளிலிருந்து உள்நாட்டுக்கு வருகை தரும் இலங்கையர்களுக்கு PCR பரிசோதனைகளை அந்தந்த நாடுகளில் மேற்கொண்டு அறிக்கை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏதேனும் உண்டா என்பது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தற்போது வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்புவர்களின் அல்லது திரும்ப விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அவர்களுக்கான பரிசோதனை நடவடிக்கைகளுக்கு உள்நாட்டில் அதிகளவான நிதி செலவாகிறது. இதனை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களில் பெரும்பாலானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று குறிப்பிட்டிருக்கிறது.
இச்சூழ்நிலையில், தனிப்படுத்தல் மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் போது இந்த நிலைமை கூடுதல் சிக்கலாகும் என கொரோனா தடுப்பு செயலணியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
லெபனானில் இருந்து வரும் இலங்கையர்களுக்கு PCR பரிசோதனை கட்டணம் அறவிடாமல் இருப்பதற்கு லெபனான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மீண்டும் நாட்டிற்கு வருவதற்கு எதிர்பார்க்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளமையினால் லெபனான் வழங்கும் இந்த உதவி பாரிய அளவு பணத்தை மீதப்படுத்த உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, கொரோனா பரவல் அதிகரித்த நாடுகள் உட்பட வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வரும் இலங்கையர்களுக்கு PCR பரிசோதனை அந்தந்த நாடுகளில் மேற்கொண்டு அறிக்கை பெற்றுக் கொள்ள வாய்ப்புகள் உள்ளதா என ஆராய்ந்து பார்க்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
இதேவேளை, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொண்டு இலங்கைக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கத்தினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.