ஜூன் 2 ஆம் திகதி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட கிழக்கு மாகாண தொல்பொருளியல் பாரம்பரிய முகாமைத்துவம் தொடர்பான ஜனாதிபதி செயலணியில் தமிழரோ அல்லது முஸ்லிமோ உறுப்பினராக இல்லை. அந்த மாகாணத்தின் சனத்தொகையில் தமிழர்களும் , முஸ்லிம்களும் சேர்ந்து மூன்றில் இரண்டு பகுதியினராக வாழ்கின்றபோதிலும் ,அந்த சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஜனாதிபதி செயலணியில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை பி.கே.பாலச்சந்திரன் தனது கட்டரையில் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவதாக ,அந்த செயலணியில் பல சிங்கள பௌத்த பிக்குமார்கள் இருக்கின்றனர்.ஆனால் ,இந்து சமயத்தினரோ அல்லது இஸ்லாத்தினரோ பிரதிநிதியாக இல்லை.மூன்றாவதாக ,செயலணி பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவின் தலைமைத்துவத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
செயலணியின் உறுப்பினர்களின் விபரம் பின்வருமாறு, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான பிரதம பௌத்த மதகுரு தொல்பொருளியல் சக்கரவர்த்தி வண.எல்லாவல மெத்தானந்த தேரர், தமன்கடுவ பிரதம சங்கநாயக்கரும் அரிசிமலை ஆரண்யவின் பிரதம குருவுமான வண.பன்னமுரே திலகவன்ச தேரர், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணவர்தன, தொல்பொருளியல் துறை பணிப்பாளர் நாயகம் செனரத் பண்டார திசாநாயக்க , காணி ஆணையாளர் நாயகம் திருமதி சந்திராஹேரத், நில அளவையாளர் ஆணையாளர் நாயகம் ஏ.எல்.எஸ்.சி.பெரேரா, களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ராஜ்குமார் சோமதேவ, பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் கபில குணவர்தன, மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் எச்.ஈ.ட்ப்ள்யு_.ஜே.திசாநாயக்க, தெரண ஊடகநிறுவனத்தின் தலைவர் திலிப் ஜயவீர.
செயலணியையும் அதற்கான உறுப்பினர்களையும் நியமிப்பதற்கான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கான காரணங்களாக பின் வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன,
‘சுபீட்சத்துக்கும்,சீர்சிறப்புக்குமான நோக்குகள் ‘ என்ற தலைப்பினால் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டவாறு இலங்கையின் வரலாற்று பாரம்பரியத்தை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாத்து பேணுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.இலங்கை ஒரு மகத்தானதும் பெருமைக்குரியதுமான வரலாற்றை மரபுரிமையாக பெற்றிருக்கின்றது.
ஒரு நாட்டின் தொல்பொருளியல்பாரம்பரியமே அதன் ஒப்பற்ற தன்மையை கட்டியெழுப்பும் மூலாதாரமாகவும், வரலாற்று படிமுறை வளர்ச்சியை பிரதிபலிப்பதாகவும் அமைகின்றது. இந்த பாரம்பரியங்கள் ஆபத்துக்குள்ளாகியிருக்கின்றன.
அவை இயற்கையின் செயற்பாடுகளினதும்,மனித செயற்பாடுகளினதும் விளைவாக இழிவுபடுத்தப்படுகின்றன.
அத்தகைய பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கு தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பல்வேறு சாசனங்களில் இலங்கை கைச்சாத்திட்டிருக்கின்றது.
செயலணி கிழக்கு மாகாணத்தில் தொல்பொருளியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அடையாளம் காணும்; அவ்வாறு அடையாளம் காணப்படுகின்ற இடங்களையும் புராதான சின்னங்களையும் பாதுகாப்பதன் மூலமாக தொல்பொருளியல் பாரம்பரிய முகாமைத்துவத்துக்கான பொருத்தமான செயற்திட்டங்களை அடையாளம் கண்டு செயலணி நடைமுறைப்படுத்தும்; அத்தகைய தொல்பொருளியல் இடங்களுக்காக ஒதுக்கப்பட வேண்டிய நிலப்பரப்பின் அளவை செயலணி அடையாளம் கண்டு உகந்த முறையிலும் சட்டரீதியாகவும் அவற்றை ஒதுக்குவதற்கு தேவையானநடவடிக்கைகளை எடுக்கும்; தொல்பொருளியல் முக்கியத்துவமுடைய இடங்களில் கலாசார பெறுமானங்களை பாதுகாத்து இலங்கையின் தனித்துவத்தை உள்நாட்டிலும்இ சர்வதேசத்திலும் செயலணிமேம்படுத்தும். அத்துடன் அத்தகைய பாரம்பரியங்களை மேம்படுத்துவதற்கான விதப்புரைகளையும் செயலணி வழங்கும்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன செயலணியின் தலைவராகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்திசேனநாயக்க செயலணியின் செயலாளராகவும் இருப்பர்.
இந்த செயலணி மாநாயக்கர்கள் உட்பட பௌத்த ஆலோசனை கவுன்சிலின் சிந்தனையில் உதித்ததாகும்.இன்னும் ஓரிருமாதங்களில் நடத்தப்படவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் சிங்கள பௌத்த வாக்காளர்கள் மீதான ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதிக்க பிடியை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டதே இதுவென்று தோன்றுகின்றது.
ஒரு முன்னாள் மேஜர் ஜெனராலான பாதுகாப்பு செயலாளரை செயலணியின் தலைவராக நியமித்ததன் மூலம் செயலணியினால் மேற்கொள்ளப்படக் கூடிய எந்த தீர்மானமும் இராணுவ பாணியில் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அரசியல் செய்தி சொல்ப்படுறது.
கோத்தாபயவின் அரசாங்கம் மெய்யான ஆர்வத்துடன் செயற்படுகின்றது என்ற நம்பிக்கையை இது சிங்கள பௌத்த தேசியவாதிகளுக்கு கொடுக்கின்றது.
சுதந்திரத்திற்கு பின்னரான காலக்கட்டத்தில் திட்டமிட்ட குடியேற்றங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு வரும் தங்களது ‘பாரம்பரிய தாயகமாக’ வடக்கு கிழக்கை தமிழ் தேசிய வாதிகள்(விடுதலை புலிகள் ஆதரவு ஈழம் வாதிகள் மாத்திரமல்ல) கருதுவதன் காரணத்தினால் ஒரு கடும்போக்கைக் காட்டவேண்டியது அவசியமானது என்று இந்த சிங்கள தேசிய வாத சக்திகள் நம்புகின்றன.
தொல்பொருளியலாளரின் பிரதிபலிப்பு
செயலணியில் உள்வாங்கப்பட்டிருக்க கூடிய தமிழ் அல்லது முஸ்லிம் தொல்பொருளியலாளர் எவரும் இலங்கையில் இல்லையா என்று கேட்டப்போது , குறைந்தது பத்து தொல்பொருளியலாளர்கள் இருக்கிறார்கள்.
அவர்களில் சிலர் மட்டக்களப்பில் பணியாற்றுகிறார்கள் என்று களனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற தொல்பொருளியலாளர் பேராசிரியர் ஜகத் வீரசிங்க கூறினார்.பொருத்தமான வரலாற்று எடுத்துரைப்பின் ஊடாக பெரும்பான்மை சமூகத்தின் நலனை மேம்படுத்துவதற்கான தற்போதைய தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் விளைவாகவே வேறு இன,மதத்தைச் சேர்ந்த நிபுணர்கள் சேர்த்துக் கொள்ளப்படாமல் இருந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
தொல்பொருளியலை சமகாலத்திலிருந்து விடுபட்டதாக – கடந்த காலத்துக்குறிய கதையாக மாத்திரம் நோக்க முடியாது. அது முன்பு ஒரு சமகாலத்திற்குரியதாகவும், வரலாற்றுரீதியானதாகவும் இருக்கின்றது என்று கூறிய பேராசிரியர் வீரசிங்க , இலங்கையில் செய்யப்படுவது நிகழ்காலத்தை அலட்சியப்படுத்தி தொல்பொருளியலை பயன்படுத்தி ஒரு கடந்த காலத்தை கட்டியெழுப்பும் வேலையாகும் என்று சொன்னார்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால் தொல்பொருள் முக்கியம்வாய்ந்த இடங்களில் தற்போது வசித்து வரும் மக்கள் (இன அல்லது மதக்குருக்கள்) பல நூற்றாண்டுகளாக அங்கு வசித்து வந்த போதிலும் கூட அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள்.
உள்ளுர் மக்களின் தேவைகளை அலட்சியம் செய்து தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குள் அரசாங்கம் அதன் செயற்பாடுகளை திணிக்கும் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த இடங்களிலும் அவற்றை சுற்றிவரவும் வாழுகின்ற மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நல்ல தரமான தொல்பொருளியல் பணியை செய்யமுடியாது என்று பேராசிரியர் வீரசிங்க வலியுறுத்துகிறார்.
தம்புள்ளையில் இப்பன்கடுவவில் அகழ்வாராய்ச்சி பணிகளை பிரபலமான தொல்பொருளியல் நிபுணர் சேனக பண்டாரநாயக்க விரும்பிய போது அங்கு வாழ்ந்துக் கொண்டிருந்த சிங்களவர்கள் தங்களது நிலத்தை கைவிட முடியாது என்று எதிர்ப்பு காட்டிய சம்பவத்தை நினைவு படுத்திய வீரசிங்க , தங்களது நிலங்களில் காலடிவைக்க முயற்சிக்கும் எவரையும் கொலை செய்ய போவதாகவும் அவர்கள் எச்சரித்தனர்.
இறுதியில் அந்த மக்களே வென்றார்கள். ஆனால் அந்த அகழ்வாராய்ச்சி திட்டத்தை வெற்றிக்கரமாக பூர்த்திசெய்ய 30 வருடங்கள் சென்றது என்று வீரசிங்க சுட்டிக்காட்டினார்.
சிரான் தெரணியகல போன்ற நாட்டின் சிறந்த தொல்பொருளியல் நிபுணர்கள் ஜனாதிபதி செயலணியில் சேர்க்கப்படாமை அதிர்ச்சி தருவதாகவும் அவர் கூறினார். சீனாவில் அகழ்வாராய்ச்சியில் ஈடுப்பட்டிருக்கும் இன்னொரு பெயரையும் வீரங்க குறிப்பிட்டார்.