இந்திய மாநிலம் கேரளாவில் பணம் தொடர்பான பிரச்சனையில் தந்தையை கொலை செய்துவிட்டு, இரண்டு நாள்வரை சடலத்தின் அருகே அமர்ந்து மது அருந்திய மகனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
திருவனந்தபுரம் பகுதியில் குடியிருந்து வந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், எஸ்பிஐ வங்கி முன்னாள் துணை பொது மேலாளருமான ஜெயமோகன் தம்பி என்பவரே மகனால் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்டுவந்த மோதல் போக்கும் மது போதையுமே இறுதியில் கொலையில் முடிந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமது மனைவி இறந்த நிலையில், மதுவுக்கு அடிமையாகியுள்ளார் ஜெயமோகன் தம்பி.
இதனிடையே மத்திய கிழக்கு நாடுகள் ஒன்றில் சமையற்கலைஞராக பணியாற்றிய ஜெயமோகனின் மகன் அஸ்வின், மதுவுக்கு அடிமையான காரணத்தால் வேலை இழந்து நாடு திரும்பினார்.
மனைவி கண்டுகொள்ளாத நிலையில் தொடர்ந்து தந்தையுடன் வசித்து வந்த அஸ்வின், அவருடன் இணைந்து நாளடைவில் மது அருந்தவும் தொடங்கியுள்ளார்.
மட்டுமின்றி, ஜெயமோகனின் வங்கி அட்டைகள் அனைத்தையும் கைப்பற்றி வைத்திருந்துள்ளார் அஸ்வின். ஓய்வூதியம் உட்பட நல்ல தொகை ஒன்றை மாத வருவாயாக ஈட்டி வந்துள்ளார் ஜெயமோகன் தம்பி.
இந்த விவகாரமே இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனையை ஏற்படுத்தி வந்துள்ளது.
சம்பவத்தன்று இருவரும் ஒன்றாக மது அருந்திய நிலையில், தமது வங்கி அட்டைகளை மகனிடம் கேட்டுள்ளார் ஜெயமோகன்.
இதில் ஆத்திரமடைந்த அஸ்வின், தந்தையை அடித்தே கொன்றுள்ளார். ஆனால் அவர் இறந்தது தெரியாமல், வெளியே சென்று மது வாங்கி வந்து மீண்டும் மது அருந்தியுள்ளார்.
தொடர்ந்து இரண்டு நாட்கள் தந்தையின் சடலத்தின் அருகே அமர்ந்து மது அருந்தியுள்ளார் அஸ்வின்.
இதனிடையே, சடலம் அழுகிய வாசனையால் அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
பொலிசார் ஜெயமோகனின் வீட்டுக்குள் சென்உ சடலத்தை மீட்டுள்ளதுடன் அஸ்வினை கைது செய்துள்ளனர்.
சனிக்கிழமை இரவு மது அருந்தியபோது ஏற்பட்ட கருத்து மோதலில் தந்தையை தாக்கியதாக கூறும் அஸ்வின், தொடர்ந்து 3 நாட்கள் உணவேதும் சாப்பிடவில்லை எனவும், ஆனால் மது மட்டும் அருந்தியதாக தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, மது போதையில் இருந்ததால் தந்தை இறந்த தகவல் தமக்கு தெரியாது எனவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.