அனைத்து பல்கலைக்கழகங்களும் ஜூன் 22ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம், எடுப்பதற்காக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று கூடியிருந்தது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தலைமையில் அனைத்து துணைவேந்தர்களுக்கிடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்தே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக மருத்துவ பீட இறுதியாண்டு பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக, மருத்துவ பீடத்தை, 15 ஆம் திகதி திறப்பதற்கு ஏற்கெனவே தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றைய கூட்டத்தின் போது, அனைத்து பல்கலைக்கழகங்களும் ஜூன் 22ஆம் திகதி மீண்டும் திறக்கப்படுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அனைத்து பல்கலைக்கழகங்களினதும் 4 ஆம் வருட மாணவர்களின் பரீட்சைகள் ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலையடுத்து, மூன்று மாதகாலமாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், அவற்றை 3 கட்டங்களின் அடிப்படையில் திறக்க அரசாங்கம் முன்னதாக ஆலோசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.