மக்களுக்கு வழங்குவதாக வாக்குறிதியளித்த வாகன குத்தகை நிவாரணத்தை அரசாங்கம் பெற்றுக்கொடுப்பதுடன் லீசிங் மாபியாவுக்கு எதிரா உடனடியாக சட்டத்தை நிலை நாட்டவேண்டும்.
அரசாங்கத்தின் தூரநோக்கற்ற சிந்தனையால் அப்பாவி ஒருவரின் உயிர் பழியாகி இருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அடித்து கொலைசெய்யப்பட்ட இலங்கை சுயதொழில் நிபுணர்களின் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்த்தனவின் பூதவுடலுக்கு நேற்று இறுதிமரியாதை செலுத்திவிட்டு அங்கு ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
மக்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளித்த வாகன குத்தகை நிவாரணத்தை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கவேண்டும். அதேபோன்று லீசிங் மாபியாவுக்கு எதிராக உடனடியாக சட்டத்தை நிலைநாட்டவேண்டும்.
குதிரை தப்பிச்சென்ற பின்னர் அதன் தொழுவத்தை அடைப்பதுபோலவே இன்று அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.
அரசாங்கத்தின் குறுகிய சிந்தனை போக்கு காரணமாக பெறுமதிமிக்க உயிர் பழியாகி இருக்கின்றது. இதனால் குடும்பத்துக்கு கணவனும் பிள்ளைகளுக்கு தந்தையும் இல்லாமலாகி இருக்கின்றது.
மேலும் தந்தை ஒருவரின் இழப்பால் பிள்ளைகள் எந்தளவு பாதிக்கப்படுகின்றனர் என்பதை நான் நன்கு உணர்கின்றேன். அவர்களின் வாழ்க்கையை பாதுகாக்க என்னால் முடிந்த உதவிகளை செய்ய நான் பின்னிற்கப்போவதில்லை.
சுனில் ஜயவர்த்தனவின் மூன்று பிள்ளைகளில் ஒருவர் பல்கலைக்கழகத்தில் படிக்கின்றார். மற்ற இருவரும் கல்வி கற்று வருகின்றனர்.
அத்துடன் அரசாங்கம் மக்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளித்த குத்தகை நிவாரணம், லீசிங் கம்பனிகளுக்கு முறையாக அறிவுறுத்த தவறி இருக்கின்றது.
அதனால் ஏற்பட்டிருக்கும் இந்த துரதிஷ்டவசமான கொலையினால் நாடு பூராகவும் வன்முறைகள் அதிகரித்திருக்கின்றதாகவே புலனாகின்றது.
எனவே தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்த இந்த அரசாங்கத்தின் கீழ் இன்று, கொலை, கொள்ளை, தாக்குதல்கள் போன்ற சம்பவங்கள் அதிகமாக இடம்பெறுவதை கேட்கக்கிடைக்கின்றன என்றார்