கிரேட்டர் மான்செஸ்டரில் சனிக்கிழமை 20 வயது நபர் இறந்ததுடன், பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு இலக்கானார் மற்றும் மூவர் கத்திக்குத்து சம்பவத்திற்கு இரையானதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கிரேட்டர் மான்செஸ்டரின் கேரிங்டன் பகுதியில் அமைந்துள்ள Daisy Nook Country பூங்காவில் சனிக்கிழமை மாலை நேரம் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.
பொலிஸ் தரப்பில், சட்டவிரோதமாக கூடிய இந்த மக்கள் கூட்டமானது சுமார் 6,000 பேர் இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் அதிக போதை மருந்து உட்கொண்டு, அதனால் ஏற்பட்ட பின்விளைவால் மரணமடைந்துள்ளார்.
மட்டுமின்றி 18 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கும் இரையாகியுள்ளார்.
மூவர் மீது கத்திக்குத்து தாக்குதலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் பொலிசார் தோல்வியுற்ற நிலையில்,
பொலிஸ் வாகனங்களும் சூறையாடப்பட்டுள்ளது. கத்திக்குத்துக்கு இரையான நபரில் ஒருவர் 18 வயது இளைஞர் எனவும், மருத்துவ உதவிக்குழுவினர் வரும் முன்னர் பொலிசாரே முதலுதவி அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காயமடைந்த 25 மற்றும் 26 வயதுடைய இருவரையும் பொலிசார் மீட்டு, மருத்துவமனை சேர்ப்பித்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் கூரான ஆயுதத்துடன் நடமாடிய குற்றத்திற்காக 25 வயது இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
18 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரத்திற்கு இலக்கானதையும் நாங்கள் விசாரித்து வருகிறோம் … மேலும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உதவும் வகையில் சிறப்பு அதிகாரிகள் எங்களிடம் உள்ளனர் என்று பொலிசார் தெரிவித்தனர்.
மட்டுமின்றி கேரிங்டன் பகுதியில் நடந்த மூன்று துயர சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் எவரேனும் வீடியோ பதிவுகளை கொண்டிருந்தால், பொலிசாருக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.