மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த வேளையில் அவர் முகங்கொடுத்த சவால் மிக்க அனுபவத்தில் முதலிடம் பெறுவது மத்திய வங்கி பிணைமுறி விவகாரமாகும்.
அரசுக்கு 11 பில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஆராய ஜனாதிபதி ஆணைக்குழுவையும் இந்த கொடுக்கல் வாங்கல் இடம்பெற்ற குறுகிய காலத்திலேயே அவர்நிய மித்தார்.
இந்த பிணைமுறி கொடுக்கல் வாங்கலில் முதலாவதாக குற்றஞ் சாட்டப்பட்டவர் அப்போதைய மத்திய வங்கி ஆளுநராகப் பதவி வகித்த
அர்ஜுன் மகேந்திரனாவார். அவரது மருமகனுக்குச் சொந்தமான பேர்பசுவல் நிறுவனத்துக்கு முறையற்ற விதத்தில் நன்மை கிடைக்கும் வகையில் கொடுக்கல் வாங்கலைச் செய்ததன் காரணமாக இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து தரப்பினரையும் சட்டத்தின் முன் நிறுத்தும் நடவடிக்கைகள் 2017 ம் ஆண்டின் இறுதியில் மேற்கொள்ளப்பட்டன.
அவ்வேளையில் அதனுடன் சம்பந்தப்பட்ட பலர் கைது செய்யப்பட்டார்கள். அர்ஜுனவின் மகளின் கணவரான அர்ஜுன் அலோசியஸ், பர்பசுவல் நிறுவனத் தலைமை நிறைவேற்றுனர் கசுன் பலிசேன, பணிப்பாளர் மற்றும் மத்திய வங்கியின் பதில் ஆளுநராகப் பதவி வகித்த பி.அமரசிறி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
கைது செய்யப்படுவார் என முன்னரே ஊகிக்கப்பட்ட மத்திய வங்கி ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அர்ஜுன் மகேந்திரன் வெளிநாட்டிற்குச் சென்று விட்டார்.
அவர் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றிருந்தவர் என்பதால் சிங்கப்பூரில் குடியேறி விட்டார். அதனால் அவரைக் கைது செய்வது கஷ்டமான விடயமாக மாறி விட்டது. அரசாங்கம் அவரை இங்கு அழைத்து வர பல முயற்சிகள் மேற்கொண்டது.
எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எப்படியாவது மத்திய வங்கி மோசடியாளர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டுமென எண்ணினார். அதனை பகிரங்கமாகக் கூறவும் செய்தார். அது மாத்திரமல்ல சிங்கப்பூருக்குச் சென்ற பல சந்தர்ப்பங்களிலும் அந்நாட்டுப் பிரதமர் மற்றும் அதிகாரிகளுடன் இதுபற்றிக் கூறியுள்ளார்.
ஆனால் அதனை சட்டரீதியாகவே மேற்கொள்ள வேண்டும். அந்நாட்டு குடிமகனொருவரை இன்னொரு நீதிமன்றத்தின் முன்பாக ஆஜர்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பலவுள்ளன.
காரணம் அவரை வெளியேற்றும் சட்டத்தின்படி நிறைவேற்ற வேண்டிய விபரக் குறிப்புகள் பல உள்ளமையாகும். அவற்றைப் பூர்த்தி செய்வது தொடர்பாக அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
அது அர்ஜுன் மகேந்திரனை இங்கு அழைத்து வர அவர் மூன்று நாட்களாக கையில் தழும்பு ஏற்படும் வரை 21000 கையெழுத்துகளை இட்டிருந்தார் என்பதாகும். அதன்படி பார்த்தால் அவர் கின்னஸ் சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளாரா என மக்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.
மூன்று நாட்கள் என்பது 72 மணித்தியாலங்கள். 72 மணித்தியாலங்களுக்குள் இருபத்தோராயிரம் கையெழுத்துகள் இடுவதென்றால் ஒரு நிமிடத்தில் 4 அல்லது ஐந்து கையெழுத்துகள் இட வேண்டும். அது முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு மிகவும் சிரமமான விடயமாகும்.
முன்னாள் ஜனாதிபதி மூன்று நாட்களாக தமது அன்றாட பணிகளுக்கு மத்தியிலேயே கையெழுத்திட்டிருக்க வேண்டும். அதே போல் நித்திரை செய்வது, முக்கியமான தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பது என்பனவும் செய்திருக்க வேண்டும்.
குறைந்தது 04 மணித்தியாலங்கள் உறங்கி ஏனைய கடமைகளுக்கு இரண்டு மணித்தியாலங்கள் ஒதுக்கினாலும் மூன்று நாட்களுக்கு 18 மணித்தியாலங்களை ஒதுக்க வேண்டும். அவ்வாறென்றால் முன்னாள் ஜனாதிபதிக்கு 21,000 கையெழுத்துகள் இடுவதற்கு ஒரு நாளைக்கு 18 மணித்தியாலங்களை ஒதுக்க வேண்டும். அதன்படி 7,000 கையெழுத்துகளை 18 மணித்தியாலங்களில் இட வேண்டும். அதன்படி ஒரு நிமிடத்துக்கு 06
கையெழுத்துகளை இட வேண்டும். அது இலகுவான விடயமல்ல. அது சில வேளை கின்னஸ் சாதனையாகவும் இருக்கக் கூடும். எமது முன்னாள் ஜனாதிபதி உலக சாதனை நிகழ்த்தியுள்ளாரா இல்லையா என கின்னஸ் சாதனை புத்தகத்தை ஆராய்ந்தாலேயே இது பற்றிக் கூற முடியும்.
கின்னஸ் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக பல உலக சாதனைகள் உள்ளன.
நீண்ட கையெழுத்து, ரிஷேர்ட்டில் கையெழுத்திடல் என பலவுள்ளன. ஆனால் எங்குமே குறிப்பிட்ட காலத்தில் அதாவது நாளொன்றில் நீண்ட நேரம் கையெழுத்திட்ட நபரொருவரைப் பற்றி குறிப்புகள் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதன்படி நிச்சயமாக அவர் இவ்வாறு கையில் தழும்பு வரும்வரை கையெழுத்திட்டிருந்தால் அவரின் பெயரும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறலாம்.
மேலும் அர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஆவணங்கள் 21,000 பக்கங்களைக் கொண்டிருந்ததாக சட்டமா அதிபர் திணைக்களமும் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி தனிநபரொருவரை நாட்டிற்கு அழைத்து வர தயாரிக்கப்பட்ட பாரிய ஆவணமாக சாதனை புத்தகத்தில் இடம்பெறவும் சந்தர்ப்பம் உண்டு.
இதேவேளை மத்திய வங்கியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்திய பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தெற்காசியாவிலேயே பாரிய மோசடியென அரசியல்வாதிகள் குறிப்பிடுகின்றார்கள்.