மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து விலகி சென்றவர்கள் என்றாலும் அந்த கடந்த காலத்தை மறந்து விட்டு முன்னிலை சோசலிசக் கட்சியுடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பல்வேறு சக்திகளுடன் இணைந்து செயற்பட தமது கட்சி ஆரம்பித்துள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தி அமைப்பு அப்படியானதொரு அமைப்பே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
மக்களின் ஜனநாயக உரிமையை வென்றெடுத்து கொடுப்பதற்காக மாத்திரமல்ல, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டத்திலும் முன்னிலை சோசலிசக் கட்சியுடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாகவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குமார் குணரட்னம் தலைமையிலான முன்னிலை சோசலிசக் கட்சியினர் மக்கள் விடுதலை முன்னணியில் அங்கம் வகித்ததுடன் அந்த முன்னணிக்குள் ஏற்பட்ட கொள்கை ரீதியான முரண்பாடுகள் காரணமாக அதில் இருந்து விலகி முன்னிலை சோசலிசக் கட்சியை ஆரம்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் இவ்வாறான அறிவிப்பை விடுத்துள்ளார்.