ஆவா குழுவின் முக்கியஸ்தர் என பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டவரும் தற்போது பிரான்ஸில் வசித்துவரும் சன்னா என்பவரின் பிறந்தநாளை கிளிநொச்சிப் பகுதியில் இளைஞர்கள் சிலர் கொண்டாடியுள்ள நிலையில் அவர்களில் 30 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கிளிநொச்சி, அக்காராயன் குளத்தை அண்டிய காட்டுப்பகுதி ஒன்றில் கடந்த 12ஆம் திகதி கூடிய சில இளைஞர்கள் ‘சன்னா’ எனப் பெயர் பொறிக்கப்பட்டு, கோடரியின் உருவமும் பொறிக்கப்பட்ட கேக்கை வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் அவ்விடத்தை பொலிஸார் சுற்றிவளைத்த போது பலர் தப்பிச் சென்றிருந்த வேளையில் 30 பேரை பொலிஸார் மடக்கிப்பிடித்து கைதுசெய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களை மறுநாள் பொலிஸார் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து 30 பேரையும் விளக்கமறியலில் தடுத்துவைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இதேவேளை, கடந்த 15ஆம் திகதி யாழ் மருதனார்மடப் பகுதியில் உள்ள வீடொன்றில் சன்னாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறுவதாக யாழ்,மாவட்ட குற்றத்தடுப்புத் பொலிஸ் பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டை சுற்றி வளைத்து 26 இளைஞர்களைக் கைது செய்திருந்தனர்.
அவர்களை யாழ்.பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தி நேற்று நீதிமன்றில் முற்படுத்திய போது, அவர்கள் மீது கேக் வெட்டிய குற்றச்சாட்டை பொலிஸார் சுமத்தாது, சட்டவிரோதமாக கூட்டம் கூடிய குற்றச்சாட்டினைச் சுமத்தி மன்றில் முற்படுத்தியிருந்த நிலையில் அவர்களில் 24 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.