இந்தியாவில் கிளென்மார்க் என்ற நிறுவனம் கொரோனாவை குணமாக்க தயாரித்திருக்கும் பெவிபிரவிர் என்ற மாத்திரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சீனாவில் முதன் முதலில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இன்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் இல்லாத நிலையில், பரவலை தடுக்க, பல நாடுகளிலும், பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சேர்ந்த மருந்துகள் தயாரிப்பு நிறுவனமான, கிளென்மார்க், கொரோனாவை குணமாக்கும், ‘பெவிபுளூ’ என்ற, ‘பிராண்ட்’ பெயரில் மாத்திரை ஒன்றை தயாரித்துள்ளது.
இந்த மாத்திரைக்கு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மாத்திரை, 200 மில்லி கிராம் எடை கொண்டது. ஒரு மாத்திரையின் விலை, 103 ரூபாயாகவும், 34 மாத்திரைகள் அடங்கிய ஒரு அட்டை, 3,500 ரூபாயாகவும்,நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத்திரையை, வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் நாளில் இரண்டு வேளைக்கு, தலா, 1,800 மில்லி கிராமும், அடுத்த 13 நாட்களுக்கு தினமும் இரண்டு வேளையாக தலா 800 மில்லி கிராமும் உட்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



















