கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரம் வழமைக்கு திரும்பும் வரை மக்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதிக்கு பின்னர் மக்கள் சார்பு அரசாங்கம் உருவாக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் காலி தொகுதி அமைப்பாளர் மனுஷ நாணயக்கார ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
இந்த அரசாங்கம் மக்கள் மீது எந்தளவுக்கு ஆத்திரமாக இருக்கின்றது என்பது எரிபொருள் விலைகளில் ஓராண்டு எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்ற தீர்மானத்தின் மூலம் அறிய முடிகிறது.
உலக சந்தையில் எரிபொருள் விலை தொடர்ந்தும் குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுடன் அரசாங்கத்திற்கு மக்கள் மீது நிதி ரீதியான மதிப்பீடு என்ன என்பது தெரியவந்துள்ளது.
அரசாங்கத்தின் மதிப்பீட்டுக்கு அமைய நாட்டில் வாழும் குடும்பம் ஒன்றின் பெறுமதி 5 ஆயிரம் ரூபாய்.
ஐக்கிய மக்கள் சக்தி குரல் கொடுத்தன் காரணமாகவே மக்களுக்கு இந்த 5 ஆயிரம் ரூபாயும் கிடைத்தது.
இதற்காக தினமும் செய்தியாளர் சந்திப்புகளின் போது அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தோம்.
புள்ளிவிபர திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய நான்கு பேரை கொண்ட ஒரு குடும்பம் ஒரு மாதம் தமது வாழ்க்கையை கொண்டு நடத்த 20 ஆயிரம் ரூபாய் தேவை.
20 ஆயிரம் ரூபாயை வழங்குவதற்கு பதிலாக வெறும் 5 ஆயிரம் ரூபாயை வழங்கினார்கள். தேர்தல் காரணமாக மேலும் 5 ஆயிரம் ரூபாயை அரசாங்கம் மக்களுக்கு வழங்க முடியும்.
ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பிறகு மக்களின் ஆசியுடன் ஆட்சியமைக்கும் போது அரசாங்கம் செய்ய வேண்டிய அனைத்து அர்ப்பணிப்புகளையும் செய்து, பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வரும் வரை மக்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாங்கள் இப்படி கூறும் போது 2 ஆயிரத்து 500 ரூபாவில் ஒரு குடும்பம் மாதம் ஜீவிக்கலாம் எனக் கூறிய அமைச்சர் அது எப்படி சாத்தியமாகும் என கேள்வி எழுப்பலாம்.
இந்த அரசாங்கம் 400 லட்சம் டொலர்களை செலவிட்டு கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணிக்க முயற்சித்து வருகிறது.
இந்த பணத்தை மாதம் 20 ஆயிரம் கொடுப்பனவை வழங்க நாங்கள் பயன்படுத்துவோம். கல்கிஸ்சையில் கடல் மண் நிரப்பும் திட்டத்திற்கு அரசாங்கம் 8 ஆயிரத்து 900 லட்சத்தை அரசாங்கம் செலவு செய்துள்ளது.
இவற்றை செய்ய இது தருணமல்ல. இப்படியான நேரத்தில் மக்களுக்கு பொருளாதார ரீதியாக நிவாரணத்தை வழங்க வேண்டும்.
வேறு நாடுகளில் அரசாங்கங்கள். நாட்டு மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளன. இப்படியான வேலைத்திட்டம் குறித்து எமது நாட்டின் அரசாங்கம் எண்ணிக் கூட பார்க்கவில்லை.
இப்படி எமது நாடு முன்னோக்கி செல்ல முடியாது. பொருட்களின் விலைகள் மற்றும் வாழ்க்கை செலவு என்பவற்றை மக்களால் தாங்க முடியாதுள்ளது.
தற்போது பொருட்களின் விலைகள் எப்படி இருக்கின்றது. பருப்பு மற்றும் டின் மீனுக்காக விலை கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளது.
இது மனசாட்சியில்லாத அரசாங்கம். மனிதாபிமானம் இல்லாத அரசாங்கம். ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பின்னர் தொலைபேசி வெற்றி பெற்றதும் மனிதாபிமானம் அரசாளும், வறிய மக்களை பராமரிக்கும், முழு இலங்கை மக்களையும் பாதுகாக்கும் அரசாங்கத்தை நாங்கள் உருவாக்குவோம்.
மக்களின் துன்பங்களை அறிந்த தூய்மையானவர்கள் அடங்கிய அரசாங்கத்தை அமைப்போம். உடன்பாட்டு அரசியலை நிராகரிக்கின்றோம் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.



















