கொரோனா நெருக்கடி தொடர்பாக விவாதிக்க, ஐரோப்பிய கவுன்சிலின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக டென்மார்க் பிரதமர் தனது திருமணத்தை ஒத்திவைத்துள்ளார்.
உலகின் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு இன்னும் முற்றாக விலகாத நிலையில், திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டே வருகிறது.
இந்த நிலையில் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் தமது திருமணம் தொடர்பில், பேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்துடன் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தமது காதலரை மிக விரைவில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக குறிப்பிட்ட ஃபிரடெரிக்சன்,
ஆனால் நாம் நினைப்பது போல அது ஒன்றும் அத்தனை எளிதல்ல என்றும், தாங்கள் திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்த ஜூலை மாதத்தின் அந்த சனிக்கிழமை ஐரோப்பிய கவுன்சிலின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தேசத்தின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதே முறை என்பதால், மீண்டும் தங்கள் திருமண திகதியை மாற்றியதாக ஃபிரடெரிக்சன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் மிக விரைவில் இன்னொரு திகதியில் தாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெவ்வேறு காரணங்களால் தங்கள் திருமணத்தை மூன்றாவது முறையாக ஒத்திவைத்துள்ளார் பிரதமர் ஃபிரடெரிக்சன்.
ஐரோப்பிய கவுன்சிலின் ஆலோசனை கூட்டமானது ஜூலை 17-18 நாட்களில் முன்னெடுக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் 27 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் கூட்டப்படும் முதல் கூட்டம் இதுவாகும்.
இடது சோசலிச ஜனநாயக கட்சியை சேர்ந்த 41 வயதாகும் மெட்டே ஃபிரடெரிக்சன், கடந்தாண்டு டென்மார்க்கின் இளம் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.