மாத்தளை, பெல்வெஹர தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியிருந்த நால்வருக்கு மலேரியா நோய் ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மலேரியா ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் ஆபிரிக்க நாடுகளிலிருந்து இலங்கை திரும்பியவர்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இன்று நுளம்புகள் தொடர்பான விசேட நிபுணர் குழுவொன்றும், சுகாதார அதிகாரிகள் குழுவொன்றும் குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தின் சுற்றுப்புறத்தில் நுளம்பு பெருக்கம் குறித்து ஆய்வொன்றினை மேற்கொண்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பி, இங்குள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கியுள்ள நபர்களுக்கு மலேரியா நோய் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க மலேரியா ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவர்கள் தமது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்து வீடு திரும்பியதன் பின்னர் பிரதேச மலேரியா ஒழிப்பு அதிகாரிகளின் ஊடாக நோய் நிலைமை தொடர்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியினுள் 16 மலேரியா நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், கடந்த வருடத்தில் 53 மலேரியா நோயாளிகள் மாத்திரமே பதிவாகியிருந்ததாகவும் மலேரியா ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.



















