வௌ்ளவத்தையிலுள்ள வர்த்தக நிலைய தொடரொன்றில் இன்று முற்பகல் பரவிய தீயினால் நான்கு வர்த்தக நிலையங்கள் முற்றாக தீக்கிரையகையுள்ளன.
டப்ளியூ. ஏ. சில்வா மாவத்தைச் சந்திக்கு அருகே உள்ள துணிக் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ, அதன் அருகில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கும் பரவியதால் இவ்வனர்த்தம் சம்பவித்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் கூறியுள்ளனர்.
துணி, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வி ற்பனைச்செய்யும் வர்த்தக நிலையங்களே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
எவ்வாறாயினும் பாரிய தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு படை வீரர் ஒருவர், இதன்போது காயமடைந்து கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் ( களுபோவில போதன அவைத்தியசாலை) சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை, டப்ளியூ.ஏ.சில்வா மாவத்தை சந்திக்கருகில் உள்ள துணிக் கடை ஒன்றில் இன்று முற்பகல் தீ பரவ ஆரம்பித்ததனையடுத்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக, தீயணைப்பு சேவைகள் திணைக்களத்தின் 5 தீயணைப்பு வாகனங்கள், தெஹிவளை – கல்கிசை மாநகர சபையின் ஒரு தீயணைப்பு வாகனம் அகியன இதன்போது ஸ்தலத்துக்கு வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த தீயணைக்கும் நடவடிக்கைகள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் அதிக நேரம் நீடித்தது.
இதன்போது ஸ்தலத்துக்கு இரானுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்ர சில்வ உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவின் உயர் அதிகாரிகளும் பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகளும் சென்று நிலைமைகளை அவதானித்தனர்.
தீபரவலையடுத்து, தெஹிவளை திசையில் இருந்து கொழும்புக்குள் பிரவேசிக்கும் காலி வீதியானது, இராமகிருஷ்ணா சந்தியில் இருந்து டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை சந்தி வரை மூடப்பட்டது.
இதனால் கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களை கரையோர வீதி ஊடாக கொழும்பை நோக்கி பயணிக்க தேவையான நடவடிக்கைகள் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டன.
அத்துடன் இந்த தீ விபத்து காரணமாக காலி வீதியில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்தது.
இந் நிலையில் இன்று மாலை வரை, தீ பரவலுக்கான காரணம் உடனடியாக கண்டறியப்படாத நிலையில், வெள்ளவத்தை பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் நாளை குறித்த பகுதிக்கு சென்று தீக்கிரையான வர்த்தக நிலையங்களை பார்வையிட்டு காரணத்தைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகின்றது.
அத்துடன் குறித்த நான்கு வர்த்தக நிலையங்களும் தீக்கிரையானமையினால் ஏற்பட்ட நட்டம், துல்லியமாக கணக்கிடப்படாத நிலையில், பல மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





















