போன் அழைப்புகளை ரகசியமாக பின் தொடர்ந்து ஸ்வப்னாவும், சந்தீப் நாயரும் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் கேரள மாநிலம் வந்து போலீஸில் சரணடைய திட்டமிடிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள யு.ஏ.இ தூதரகத்துக்கு வந்த பார்சல் வழியாக தங்கம் கடத்தப்பட்டது கஸ்டம்ஸ் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. தூதரக கடிதத்துடன் அந்த பார்சலை பெற்றுக்கொள்ள வந்த ஸரித் குமார் கைது செய்யப்பட்டிந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.டி துறையின் கீழ் உள்ள நிறுவன மேலாளராக பணிபுரிந்த ஸ்வப்னா சுரேஷுக்கும் தங்கம் கடத்தலில் தொடர்பு இருப்பது குறித்த தகவல் வெளியானது.
இந்த நிலையில் ஐ.டி துறை செயலாளராகவும், முதல்வர் பினராயி விஜயனின் செயலாளராகவும் இருந்த சிவசங்கரன் முதல்வரின் செயலாளர் பதவியில் இருந்து மட்டும் நீக்கப்பட்டார். ஸ்வப்னா சுரேஷ் முதல்வருக்கு நெருக்கமானவர் என்றும் எனவே பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சியான காங்கிரஸ் போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில் இந்த வழக்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என ஸ்வப்னா சுரேஷ் ஒரு ஆடியோ வெளியிட்டிருந்தார். மேலும் முன் ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் ஆன்லைன் வழியாக மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை ஐகோர்ட் விசாரணை நடத்திய சமயத்தில் என்.ஐ.ஏ சார்பில் ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், தங்கம் கடத்தல் மூலம் தேச விரோத செயல்களில் ஈடுபடும் தீவிரவாத அமைப்புகளுக்கு பண உதவி செய்யப்படுகிறது. எனவே இது தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால் ஸ்வப்னாவை காவலில் எடுத்து விசாரித்தாக வேண்டும். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பார்சலை பெற வந்த ஸரித் குமார், இரண்டாம் குற்றவாளியாக ஸ்வப்னா சுரேஷ், மூன்றாவது குற்றவாளியாக கொச்சியைச் சேர்ந்த, தற்போது வெளி நாட்டில் இருக்கும் பைசல் பரீத், நான்காவது குற்றவாளியாக ஸ்வப்னாவின் பினாமி எனக்கூறப்படும் சந்தீப் நாயர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஸ்வப்னா 2019-ல் யு.ஏ.இ தூதரக பணியில் இருந்து விலகிய பிறகும் அடிக்கடி தூதரகத்துக்கு தேவையான பணிகளை செய்துவந்திருக்கிறார். இதற்கிடையில் சுங்கத்துறை அதிகாரியால், கஸ்டடியில் எடுக்கப்பட்ட ஸரித்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று திருவனந்தபுரத்தில் நடந்த ரெய்டில் ஸ்வப்னா தங்கம் கடத்த பயன்படுத்திய ஐந்து கேரி பேக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொச்சியில் உள்ள சந்தீப் நாயரின் வீட்டில் இரவும் ரெய்டு தொடர்ந்து நடந்தது.
இந்த நிலையில் அனைத்து பகுதியிலும் விசாரணை நடத்தும் அதிகாரத்துடன் கொச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் விஜய் சாக்கரே மேற்பார்வையில் கொச்சி துணை கமிஷனர் பூங்குழலி தலைமையில் நேற்று தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை அமைக்கப்பட்ட சில மணி நேரத்துக்குள்ளாக பெங்களூருவில் பதுங்கி இருந்த ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது.
போன் அழைப்புகளை ரகசியமாக பின் தொடர்ந்து ஸ்வப்னாவும், சந்தீப் நாயரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் கேரள மாநிலம் வந்து போலீஸில் சரணடைய திட்டமிடிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்வப்னாவும், சந்தீப் நாயரும் இன்று கொச்சிக்கு அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.