முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட கேப்பாப்புலவு கிராம அலுவலர் பிரிவின் சூரிபுரம் பகுதியில் 1990 ஆண்டில் இருந்து மக்களால், குடியிருப்புக்காகவும் விவசாய நிலமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 50 ஏக்கர் காணியில் இருந்த மக்களை அங்கிருந்து வெளியோறுமாறு கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இவ்வாறு 19 இற்கும் மேற்பட்டவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் வழும் ஒவ்வொருவருக்கும் சுமார் இரண்டு ஏக்கர் காணிகள் காணப்படுகின்றன. இந்த காணிக்குள் இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் பயிர் செய்த தென்னைமரங்கள் காய்த்த நிலையில் காணப்படுகின்றன. முந்திரி தோட்டங்கள், 12 கிணறுகள் வரையில் காணப்படுகின்றன.
இங்கு இவர்கள் நிலக்கடலைச்செய்கை வாழைச்செய்கை, மரக்கறிச்செய்கை என்பவற்றிலும் ஈடுபட்டுள்ளனர். முன்னர் இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்த இந்தக்காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் போராட்டம் நடத்தி 2017 ஆம் ஆண்டில் இந்தக்காணிகள் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அடுத்தமாதம் 12 ஆம் திகதிக்கு முன் இவர்களை காணியில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான நில அளவை நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் நேற்று முந்தினம் வருகை தந்திருந்தனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று கூடியிருந்தமையினை அடுத்து தமது நில அளவை நடவடிக்கையினை மேற்கொள்ளாது திரும்பி சென்றுள்ளனர். குறித்த காணிக்கு காணி அனுமதிப்பத்திரத்திற்கான காணிக்கச்சேரி மேற்கொள்ளப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்தமக்கள் தெரிவிக்கின்றனர்.
தாம் வாழும் காணிக்கு தமக்கான அனுமதிப்பத்திரங்களை பெற்று தராது வீதிகளில் இருந்து போராடி இராணுவத்திடம் இருந்து பெற்ற காணிகளிலிருந்து, எம்மை எழுப்பி யாருக்கு வழங்குவதற்கு பிரதேச செயலகம் முயற்சிக்கிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.