எதிர்வரும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரித்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 4 ஆசனம் சுலபமாக கிடைக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மட்டக்களப்புவந்தாறுமூலையில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல் அலுவலகத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். இதன் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்களிப்பு விதத்தினை கடுமையாக அதிகரிக்கச் செய்ய வேண்டும். 04 பிரதிநிதிகள் பெற வேண்டிய இந்த மாவட்டத்தில் மக்களின் வாக்களிப்பு வீதக் குறைவினால் 03 பிரதிநிதிகளை மாத்திரமே பெறக் கூடியதாக இருக்கின்றது. இந்நிலையினை அனைவரும் ஒன்றிணைந்து மாற்ற வேண்டும்.
திருகோணமலையில் சுமார் 85 வீத்திற்கு மேல் மக்கள் வாக்களிக்கையில் மட்டக்களப்பில் அது வெகு குறைவாகவே இருக்கின்றது. வாக்களிப்பு வீதத்தை அதிகரிப்பதுடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கான வாக்களிப்பினை அதிகரிக்கச் செய்யுமிடத்து 04 ஆசனம் கிடைப்பதென்பது அவ்வளவு கடினமான காரியமாக இருக்காது எனக்கூறியுள்ளார்.