போலியான ஆவணங்களை தயாரித்தமை தொடர்பிலான வழக்கில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவியான ஷஷி வீரவன்சவிற்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச் சீட்டு மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டு தொடர்பாக சாஷி வீரவன்ச மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை அடிப்படையாக கொண்டே பிடியாணை உத்தரவினை கொழும்பு, தலைமை நீதிவான் லங்கா ஜயரட்ண பிறப்பித்தார்.
அத்துடன் இந்த வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் இராஜதந்திர கடவுச்சீட்டு உட்பட இரண்டு கடவுச்சீட்டுகளை மோசடியாகப் பெற்றதாக ஷஷி வீரவன்ச மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டை பெறுவதற்காக போலி பெயர்கள் மற்றும் பிறந்த திகதிகள் அடங்கிய ஆவணங்களை சமர்ப்பித்த அவர் ஆரம்பத்தில் 2015 பெப்ரவரியில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.