தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, ஜனநாயகப் போராளிகள் கட்சி நேற்று (22) திருகோணமலையிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.
இச்சந்திப்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் சார்பில் தலைவர் சி.வேந்தன், செயலாளர் இ.இளங்கதிர், ஊடகப் பேச்சாளர் க.துளசி, உபதலைவர் நா.நகுலேஸ், மட்டக்களப்பு அம்பாறை பொறுப்பாளர் தீபன், திருகோணமலை பொறுப்பாளர் வினோத் உட்பட கட்சியின் செயற்குழு பிரதிநிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள், தமிழ் மக்களின் உரிமை மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கொண்டுள்ள நிலைப்பாடுகள், தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தின் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் தொடர்பில் இரா.சம்பந்தன் அவர்களால் ஜனநாயகப் போராளிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.
பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டினை ஜனநாயகப் போராளிகள் கட்சி மேற்கொண்டமைக்கான காரணங்கள் பற்றி ஜனநாயகப் போராளிகள் கட்சியினரால் விவரிக்கப்பட்டதுடன் கடுமையாகப் பாடுபட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரிய வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்கு ஜனநாயகப் போராளிகள் தயாராக இருப்பதாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த பொதுத்தேர்தலில் ஜனநாயக போராளிகள் சிலர், பத்திரிகையாளர் வித்தியாதரனுடன் சென்று இரா.சம்பந்தனை சந்தித்து, தமக்கு ஆசனம் ஒதுக்குமாறு கோரினர். எனினும், அவர்களை இரா.சம்பந்தன் ஏறெடுத்தும் பார்க்கவில்லையென அவர்கள் குற்றம்சாட்டியதுடன், சுயேட்சையாக போட்டியிட்டனர். அந்த அணியின் உருவாக்கத்தின் பின்னணியில் கோட்டாபய ராஜபக்ச செயற்பட்டதாக அப்போது செய்தி வெளியாகியிருந்தது.