அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் சீனத் தூதரகத்தை மூடக் கோரி அமெரிக்கா உத்தரவிட்டதற்குப் பதிலடியாக சீனாவின் செங்டூ நகரில் அமெரிக்கத் தூதரகத்தை சீனா அதிரடி மூடியுள்ளது.
சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் உள்ள செங்டூ நகரில் செயல்பட்டு வந்த அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டு, அங்கு ஏற்றப்பட்டிருந்த அமெரிக்கக் கொடி இன்று காலை 6.18 மணிக்கு இறக்கப்பட்டது.
அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ள பகுதி பொலிசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது, தூதரகத்தில் இருக்கும் பொருட்கள் உள்ளிட்டவற்றைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்கள், அறிவுசார் சொத்துரிமை, கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கும் ரகசியத் தகவல்கள் ஆகியவற்றை சீனாவின் ஹேக்கர்கள், சீனத் தூதரகத்தின் உதவியுடன் திருடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி, அதுகுறித்து அமெரிக்க நீதித்துறையும் எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து முதல் கட்டமாக ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தை அடுத்த 72 மணிநேரத்துக்குள் மூடுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இதற்குப் பதிலடியாக சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டூ நகரில் செயல்பட்டு வந்த அமெரிக்கத் தூதரகத்தை மூட சீன அரசு உத்தரவிட்டது. அமெரிக்காவின் செயலுக்குப் பதிலடியாக சீனாவும் நடவடிக்கை எடுத்தது.
இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், தொழில்நுட்பம், மனித உரிமைகள், பாதுகாப்பு, கரோனா வைரஸ் உள்ளிட்ட விஷயங்களில் இருந்த மோதல் இன்னும் தீவிரமடைந்துள்ளது.